எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்

                                        -ஜெயமோகன்-


[ 1 ]

ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொண்டு ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று குரல்கொடுக்கும் குழந்தையைப்போன்றவர்கள் நம் கோட்பாட்டாளர்கள். முற்றிலும் லௌகீகவாதியான ஒரு வணிகரிடம் கூட எப்படியோ கலையைப்பற்றி விவாதித்து சில அடிப்படைப்புரிதல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், ஒருபோதும் நம் கோட்பாட்டாளர்களிடம் கலையின் ஆரம்ப அடிப்படைகளைக்கூட பேசிவிட முடியாது. உண்மை என்பது தானறிந்த ஒற்றைவடிவில் திட்டவட்டமாக கைக்குச் சிக்குவது என்றும் அதை நேரடியாகச் சொல்லும் எந்த முயற்சியும் கலையே என்றும் அவர்கள் திரும்பத்திரும்ப வாதிடுவார்கள். இலக்கியத்தில் ‘அப்படியே சாப்பிட’ தயாராக எப்போதும் மேஜைக்கு நிலைகொள்கிறார்கள் இவர்கள்.

சற்று யோசித்துப்பார்க்கலாம். நமது கோட்பாட்டாளர்களின் வரிசையை எடுத்து பார்த்தால் ஒரு சராசரி வாசகன் அளவுக்குக் கூட இலக்கியப்படைப்புகளுக்குள் சென்ற ஒருவரைக்கூட நம்மால் காணமுடிவதில்லை என்று உணர முடியும். கைலாசபதி ,நா.வானமாமலை முதற்கொண்டு யமுனா ராஜேந்திரன் ஈறாக நாம் மார்க்ஸியக் கோட்பாட்டாளர்களை கண்டு வருகிறோம். பக்கம் பக்கமாக நூல்களை மேற்கோள் காட்டி தேற்றங்களை நிறுவி இவர்கள் பேசக்கேட்கிறோம். ஆனால் இலக்கியத்தைப்பற்றி எதுசொன்னாலும் அபத்தமாகவே சொல்வார்கள். இவர்கள் தெரிவுசெய்து முன்வைக்கும் படைப்பாளிகள் எப்போதுமே புடைத்துத்தெரியும் பிரச்சாரகர்கள். ஒருபோதும் ஒரு நல்ல படைப்பாளியை இவர்கள் அடையாளம் கண்டதில்லை. இவர்கள் அடையாளம் கண்ட படைப்பாளிகள் எவரும் காலத்தில் நின்றது இல்லை. ஏன், இன்று இவர்கள் தங்களவர்களாகக் கொண்டாடும் காலத்தை தாண்டிவந்த படைப்பாளிகள் பெரும்பாலும் அனைவருமே இவர்களால் முதலில் புறக்கணிக்கபப்ட்டு அதை மீறி  அவர்கள் இலக்கியதளத்தில் தங்களை நிறுவிக்கொண்ட பின் இவர்களால் ஏற்கப்பட்டவர்களே. கைலாசபதியின் ‘ரசனை’யின்படி தமிழின் மாபெரும் நாவலாசிரியர் செ.கணேசலிங்கன்,நாவல் ‘செவ்வானம்’. கஷ்டம்தான்.

இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். தமிழைப்பொறுத்தவரை நம் கோட்பாட்டாளர்கள் எப்போதும் நுண்ணிய கலைப்படைப்புகளுக்கு எதிரானவர்களாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே போட்டுக்கொடுத்துள்ள தடத்தில் நகரும் பழகிப்போன மாடுகளையே இவர்களால் அறிய முடியும். தனி வழியை தானே அறியும் இலக்கியப்படைப்பின் சுதந்திரம் இவர்களை அச்சுறுத்துகிறது. புதுமைப்பித்தன் முதல் கி.ராஜநாராயணன் வரை, வண்ணதாசன் நாஞ்சில்நாடன் வரை தமிழின் அத்தனை படைப்பாளிகளும் இந்தக் கோட்பாட்டாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு,  அவமதிக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டு மீறி உருவாகி தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்களே. தமிழில் ஒரு மாற்று உதாரணம் கூட கிடையாது.

அரசியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே சீரிய படைப்புகளுக்கு எதிராக நிலைகொள்ளும் வழக்கம் கொண்டிருந்தார்கள் என்றால் பின்னர் உருவாகிவந்த மொழியியல் ,பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்களும் அந்தப் பாதையையே பின்தொடர்ந்தார்கள். தமிழவன்,எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், அ.மார்க்ஸ் வரையிலான இலக்கியக் கோட்பாட்டாளர்களின் ஒட்டுமொத்த எழுத்துக்களை எடுத்துப்பார்க்கும்போது இந்த அம்சம் மிக ஆச்சரியமளிக்கிறது. இவர்களின் பிரசுரமான எழுத்துக்களில் பெரும்பகுதி முக்கியமான படைப்பாளிகளை அவமதிப்பதற்கும் ,அவர்களின் ஆக்கங்களைச் சிறுமைப்படுத்துவதற்குமே செலவழிக்கப்பட்டுள்ளது. விரிவான வாசிப்பு, ஆவேசமான உழைப்பு என இவர்களின் தகுதிகள் எல்லாமே இதற்காகவே செலவிடப்பட்டுள்ளன.இதற்கு முற்போக்குப்பார்வை, விளிம்புநிலை ஆய்வு என பலப்பல காரணங்கள் அவ்வப்போது சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலக்கிய நிராகரிப்பையே காணமுடிகிறது.

இவர்கள் முன்வைப்பது இலக்கிய விவாதம் அல்ல, இலக்கிய மறுப்பே .ஏனென்றால் ஒருவகை இலக்கியப் படைப்புகளை நிராகரித்து இவர்கள் வேறு எவ்வகை இலக்கியங்களை முன்வைத்தார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. சென்ற எழுபது வருடத்தில் தமிழ் இலக்கியக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே ஒரு படைப்பாளியின் பெயரை நம்மால் சொல்ல முடியுமா? எந்த தளத்திலேனும்? உள்ளூர் படைப்பாளி தேவையில்லை என்றே வைப்போம். எப்போதும் தமிழ் படைப்பாளிகளை மட்டம்தட்ட மேலைபப்டைப்புகளை சுட்டிக்காட்டும் இவர்கள் மேலைநாட்டுப் படைப்பாளி என்றாவது எவரையாவது ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசி நிறுவியிருக்கிறார்களா? நம் முற்போக்கு வட்டத்தில் இன்றுவரை  கார்க்கி அல்லது செகாவ் அல்லது ஷோலக்கோவ் அல்லது லூஷ¤ன் பற்றி ஒரு நல்ல கட்டுரையாவது எழுதப்பட்டிருக்கிறதா? நம் பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் ஒரு பின் நவீனத்துவப் படைப்பைப்பற்றியாவது ஆழமாக எழுதியிருக்கிறார்களா? போர்ஹெயையும் மார்க்யூஸையும் பற்றி இங்கே பேசியதெல்லாமே படைப்பாளிகள்.

இலக்கிய விமரிசனம் என்பது வாசகனுக்கு இலக்கியத்தை புதிய கோணங்களில் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்வது. இலக்கியப் படைப்புகளில் புதிய வாசல்களை வாசகனுக்கு திறந்து காட்டுவது. இலக்கிய விமரிசனம் என்பது ஒரு சமூகம் கொள்ளூம் வாசிப்புப் பயிற்சி. நம் கோட்பாட்டாளர்கள் யாராவது தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு படைப்பைப்பற்றியாவது ஒரு எளிய வாசகன் அவனது வாசிப்பில் அறிய முடியாத ஒரு வரியையாவது சொல்லியிருக்கிறார்களா? மௌனி பற்றி புதுமைப்பித்தன் பற்றி சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றை திரும்பிப்பார்க்கையில் பகீர் என்கிறது. கீழத்தரமான தனிப்பட்ட வசைகள், அவதூறுகள், முத்திரைகுத்தல்கள், அவ்வளவுதான். சற்றும் மிகையாகச் சொல்லவில்லை. ஆர்வமுள்ளவர்கள் இதுவரை எழுதப்பட்டவற்றை திரும்பிப் பார்க்கலாம். நெடுங்காலம் கோட்பாட்டாளர்களுக்குப் பிரியமானவராக இருந்த ஜெயகாந்தனைப்பற்றிக்கூட அவரது படைப்புகளுக்குள் ஆழ்ந்துசெல்லும் ஒரு கட்டுரை இங்கே எழுதப்பட்டதில்லை என்பதை ‘ஜெயகாந்தன் இலக்கியத்தடம்’ போன்ற நூல்களை காண்கையில் வாசகன் அறியலாம்.

ஏன் இந்த அவலநிலை? நானறிந்தவரை மேலைநாட்டுக் கோட்பாட்டுத்திறனாய்வில் இந்நிலை இல்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட இல்லை. கன்னடக் கோட்பாட்டாளர் டி.ஆர்.நாகராஜ் எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரைகள் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்களை அறிய மிக உதவிகரமானவை. கேரளக் கோட்பாட்டாளர்கள் தகழி சிவசங்கரப்பிள்ளையைப்பற்றி எத்தனை கோணங்களில் எவ்வளவு விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள்!. இங்குள்ள பிரச்சினை இரண்டு. முதலில், நம் கோட்பாட்டுத்திறனாய்வாளர்களில் விதிவிலக்கான சிலர் தவிர பிறர் மிக மொண்ணையானவர்கள். கோனார் நோட்ஸ் படித்து பட்டம்பெற்றவர்கள், படிப்பதை தொகுத்து எழுதுவதன்றி சுயமாக ஏதும் எழுத அவர்களால் இயலாது. இரண்டாவதாக, இவர்கள் கோட்பாட்டை கடவுள் போல நம்புகிறார்கள். கடவுளே கையிலிருக்கும்போது அப்புறம் வேறென்ன தேவை? அந்த மிதமிஞ்சிய தன்னம்பிக்கை காரணமாக படைப்பாளியை விட ஒருபடி மேலாக தன்னை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். படைப்பைப் ‘படித்து மார்க் போடும்’ இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறார்கள். ஒருபோதும் படைப்பாளி இவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அப்போது இவர்களின் அகங்காரம் தூண்டப்படுகிறது. வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.

கோட்பாட்டாளர்களின் ஆணவத்தால் அழிக்கப்பட்ட இலக்கியநிலம் என்றே ஈழத்தை எண்ணுகிறேன். ஈழ எழுத்தின் பெருக்கத்தை வைத்துப் பார்த்தால் மிகமிகக் குறைவான அளவு எழுத்துகக்ளையே இலக்கிய வாசகன் பொருட்படுத்த முடியும் என்பதே உண்மை. இதை பல காலகட்டங்களில் பல தமிழ் எழுத்தாளர்கள் சொல்லி , ஈழ எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். [ஈழத்தில் முற்போக்கு நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும் என்ற வண்ணநிலவனின் கருத்து நினைவுக்கு வருகிறது] சங்கடமான விஷயம்தான் இது, ஒரு பிராந்திய உணர்வின் மீது தொட்டுச் சீண்ட நேர்வது. ஆனால் வேறு வழியில்லை. எத்தனை மழுப்பினாலும் இதமாகச் சொன்னாலும் அதுவே உண்மை, ஈழம் கிட்டத்தட்ட ஓர் இலக்கியப்பாலைவனம். மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை, அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி முதலிய சிற்சில சோலைகள். ரஞ்சகுமார், சட்டநாதன், உமாவரதராஜன் போல உருவாகும் நிலையிலேயே நின்று விட்டவை பல. பெரும்பாலான ஈழ இலக்கியங்கள் அவர்களின் வாழ்க்கையின் எளிய ஆவணங்கள் என்ற அளவிலேயே கவனிக்கத்தக்கவை. இலக்கியமாக அல்ல. ஈழத்தை மொட்டையாக்கியது கோட்பாட்டுநோக்கின் மிதமிஞ்சிய மேலாதிக்கம்.

ஈழம் அளவுக்கு செல்வாக்கான கோட்பாட்டாளர்கள் எவரும் தமிழில் இருந்ததில்லை என்பதை ஓரு நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். இங்கே அரசியல் இயக்கங்களின் குரல்களாக மட்டுமே கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை மறுத்து இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை முன்வைக்கும் அழகியல் திறனாய்வாளர்களான ஏ.வி.சுப்ரமணிய அய்யர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்றவர்களின் குரல்கள் எப்போதும் இருந்தன. இலக்கியம் என்றுமே தன் முக்கியத்துவத்தை இழக்க நேரவில்லை. ஆனால் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேலான கல்வியறிவும் மேலான இலக்கிய அறிமுக விகிதாச்சாரமும் இருந்தும் கூட ஈழத்தில் நேர் மாறான நிலையே நிலவியது. ஈழத்து அரசியலியக்கங்களை விட வலிமையான மையங்களாக அங்கே கோட்பாட்டாளர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இருவரும் இருந்தார்கள் என்று தோன்றுகிறது. இருவருக்குமே மிக விரிவான கல்வியறிவும் வாசிப்பும் இருந்தது. மிகவும் மதிக்கப்படும் பதவிகளில் இருந்தார்கள். கைலாசபதி நெடுநாள் இதழியல் தளத்தில் செல்வாக்குடன் விளங்கினார் . எழுத்தாளர்கள் நாடும் பதிப்பு வசதியை எளிதில் செய்துகொடுக்கக் கூடியவராக இருந்தார். மேலும் முக்கியமாக இருவருமே தனிப்பட்டமுறையில் மிக இனிய குணம் கொண்டவர்களாக, நட்பும் பெருந்தன்மையும் மிக்கவர்களாக இருந்தனர். இக்காரணத்தால் இவர்களே ஈழ இலக்கியத்தின் மையங்களாக ஆனார்கள்.கோட்பாடு மையம் கொள்ளும்போது இலக்கியம் விலகிச்செல்கிறது

கோட்பாட்டாளன் நிலைத்த பாறை போல அசைவற்றவன். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நாம் தி.க.சிவசங்கரனை கண்டுவருகிறோம். அவரது நம்பிக்கைகள் நிலைபாடுகள் எதிலுமே சஞ்சலம் இல்லை. சஞ்சலம் கொள்ளும் கோட்பாட்டாளன் நிலையழிந்து காணாமல் போகிறான். வீழ்ச்சி அடைகிறான். மாறாக சஞ்சலமே படைப்பிலக்கியவாதியின் அடிப்படை இயல்பாக இருக்கிறது. மாபெரும்  காந்தப்புலம் ஒன்றின் முன் நிற்கும் சிறிய காந்தமுள் போன்றவன் கலைஞன். அவனை மீறிய ஒன்று அவனை எப்போதுமே நிலையழியச் செய்கிறது. அவன் எப்போதுமே நேரடியான வாழ்க்கையின் முன் நிற்கிறான். அவனது அசைவுகள் அவன் கையில் இல்லை. அவன் எந்த சூழலில் நிற்கிறான், அதற்கு அவன் அகத்தின் அவனை மீறிய ஆழம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்தது அது. எழுத்தாளனைப்பற்றி எது சொன்னாலும் அரை உண்மையாக இருக்குமென்றாலும் இப்படிச் சொல்லிப்பார்க்கலாம், எழுத்தாளன் எப்போதுமே உறுதியற்றவன்,தேடிக் கொண்டும் வளர்ந்து கொண்டும்,அழிந்துகொண்டும் இருப்பவன்,ஆகவே அவன் அமைதியற்றவன்.

உறுதியான நிலைபாடுகளுக்காகவும் தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்குகளுக்காகவும் படைப்பிலக்கியவாதியிடம் தேடுவதுபோல முட்டாள்தனம் ஏதுமில்லை. தல்ஸ்தோய் முதல் புதுமைப்பித்தன் வரை அப்படித்தான். எஸ்.பொன்னுதுரை முதல் சு.வேணுகோபால் வரை அப்படித்தான். ஆகவேதான் எழுத்தாளனின் மரணம் முக்கியமான ஒரு முழுமைப்புள்ளி ஆகிறது. அதன்பின் நம் மதிப்பீடுகளை தலைகீழாக்கும் எதையும் அந்த எழுத்தாளன் செய்துவிடமுடியாது. அவனது அதுவரையிலான எழுத்துக்களும் செயல்பாடுகளும் முழுக்க நம்மிடையே தொகுத்து அளிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றைக் கொண்டு நாம் அவனது சித்திரத்தை வனைந்து கொள்ள முடிகிறது. ஆகவேதான் எழுத்தாளனின் மரணம் கொண்டாடப்படுகிறது. அவன் இருக்கும்போது அவனைப்பொருட்படுத்தாதவர்கள்கூட அவனது மரணத்துக்குப் பின்னர் அவனை விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

படைப்பிலக்கியவாதியின் கருத்துலகம் புறத்தே நின்று நோக்கும் கோட்பாட்டாளனுக்கு முரண்பாடுகளின் தொகையாகவே தெரியும். முதிர்ச்சியின்மையும் அபூர்வமான முழுமைக்கணங்களும் ஒழுங்கின்றிக் கலந்திருப்பதாகத் தோன்றும். அப்படைப்பிலக்கியவாதியுடன் கோட்பாட்டாளனுக்கு இருக்கும் நல்லுறவைப்பொறுத்து அப்படைப்பிலக்கியவாதியின் ஒத்த கருத்தோ அல்லது முரண்பாடோ கோட்பாட்டாளனுக்கு முக்கியமானதாகப் படுகிறது. அப்படைப்பிலக்கியவாதியை கோட்பாட்டாளன் கொண்டாடவோ தூற்றவோ செய்கிறான். என் நோக்கில் ஒரு கோட்பாட்டாளன் படைப்பிலக்கியவாதிக்கு அளிக்கும் அங்கீகாரம் எதிர்ம¨றையான விளைவுக¨ளையே ஏற்படுத்தும். அவனது ஆக்கங்களை எளியவாசகர் அக்கோட்பாட்டின் விளக்கங்களாக மட்டுமே மருளும் நிலை உருவாகும். வலுவான கோட்பாட்டாளன் நல்ல படைப்புகளை தன் எதிர்மறை விமரிசனங்கள் மூலம் தற்காலிகமாக மறைக்க முடியும், திரிக்க முடியும். ஆனால் காலப்போக்கில் கோட்பாட்டாளர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பும்போது அப்படைப்பாளி தன் படைப்பின் பலத்தால் மேலெழுந்து வருவான். ஆகவே பொதுவாக கோட்பாட்டாளனின் எதிரணியில் நிற்பதே படைப்பாளிக்கு பாதுகாப்பானது. ஏனெனில் எப்போதும் நல்ல இலக்கியப்படைப்பு வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளுக்கு எதிரானதேயாகும்.

[ 2 ]

ஈழ இலக்கியத்தில் இந்த கோட்பாட்டு மையத்துக்கு மாற்றாக இரு புள்ளிகள் மட்டுமே இருந்தன, அவையே இலக்கிய ரீதியாகப் பொருட்படுத்தத்தக்கவை. இதை இருபதுவருடம் முன்பு சொன்னால் உடனே வலதுசாரி அரசியல் என்று கோட்பாட்டுத்தரப்பினர் முறைகூவல் எழுப்புவார்கள். இன்றைய வாசகன் இப்போது கோட்பாட்டாளர் தரப்பால் முன்வைக்கப்பட்ட எழுத்துக்கள் சாரமற்ற சருகுகளாக உதிர்ந்து கிடப்பதையே காண்பான் என்பதனால் இக்கூற்று நிரூபணம் தேவையற்ற ஒன்றாகிறது. அவ்விரு மையங்களை  மட்டுமே உண்மையான படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண்கள் என நான் எண்ணுகிறேன். மு.தளையசிங்கம்,எஸ்.பொன்னுதுரை இருவருமே அம்மையங்கள். இருவகையில் அவர்கள் இலக்கியத்தின் கட்டற்ற பாய்ச்சலுக்கு உதாரணங்கள்.

இலக்கியத்தில் படைப்பாளியின் அந்தரங்க எழுச்சியை நிராகரித்த மார்க்ஸிய விமரிசனம் அதை ஒரு சமூகக் கூட்டுச் செயல்பாடாக தொடர்ந்து முன்னிறுத்தியது. ஒரு சமூகத்தின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கியவாதியின் வேலை என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. இதை கம்யூனிஸம் என்பதைவிட ‘கம்மிஸாரிசம்’ என்று சொல்வதே பொருத்தம். ஈழச்சூழலில் ஓங்கியிருந்தது அதுதான். இதற்கு எதிராகவே அன்றைய சூழலில் எங்கும் தனிமனிதவாதம் முன் வைக்கப்பட்ட்டது. ‘நான் சிந்திக்கிறேன், ஆகவே என் எழுத்து என்னுடையது, என் ஆத்மாவின் வெளிப்பாடு அது, என்னுடைய தரிசனம் அது’ என்ற கூற்று மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட காலகட்டம் இது. தன் அகஎழுச்சியின் பலத்தால் நிற்க முயல்வதே இலக்கியவாதியின் முதற்கடமை என்று வலியுறுத்தப்பட்டது. மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை ஆகிய இருவரும் இருவகையான தனிமனித வாதத்தின் குரல்கள்.

மு.தளையசிங்கத்தின் தனிமனிதவாதம் தன்னை ஒரு தனித்த பிரக்ஞையாக கண்டறிவதிலிருந்து தொடங்குகிறது. தன்னுடைய ஆழ்மனம் வரலாற்றால் ஆனது என்றும் அதை அறிவதனூடாக வரலாற்றையும் வாழ்க்கையையும் அறிந்துவிடலாம் என்றும் நம்புகிறது அது. ஆகவே கோட்பாடுகளுக்கு எதிராக தான் உணர்ந்த அகத்தரிசனங்களை அது முன்வைக்கிறது. அந்த ஆழத்தை உணரும்போது அவரது தரிசனம் தன்னை பிரம்மாண்டமான ஒரு பொதுமை ஒன்றின் சிறுதுளியாக கண்டுகொள்கிறது. சமூகம் என்றும் வரலாறு என்றும் கோட்பாட்டாளர்கள் தர்க்கபூர்வமாக நிறுவமுற்படும் பொதுமை என்பது மிகச்சிறிய ஓர் உருவகமே என்றும் மானுட அகம் என்பது அதையெல்லாம் தன்னுள் சிறுதுளிகளாக அடக்கிக் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு ஒன்றின் கூறு என்றும் அறிகிறது. அதன்பின் அந்த பெரும்பொதுமையின் குரலாக நின்று அரசியல் சார்ந்த சிறு பொதுமைகளைப் பரிசீலிப்பவராகவும் நிராகரிப்பராகவும் தளையசிங்கத்தை மாற்றியது. தளையசிங்கத்தின் இலக்கியத்தின் ‘ஆன்மீக’ அம்சம் இதுவேயாகும். தனிமனிதவாதம் ஆன்மீகம் நோக்கிச்செல்லும் பயணம் என தளையசிங்கத்தைப் பற்றிச் சொல்லலாம்.

எஸ்.பொன்னுத்துரை தனிமனிதவாதத்தை தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக் கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலை நிறுத்த முயன்ற படைப்பாளி. கோட்பாட்டாளர்களின் பொதுமைப்பாடுகளை தன் படைப்பனுபவம் மூலமே நிராகரித்தவர். மனிதனை தொகுத்து வரையறை செய்து காட்ட ஓயாது முயன்ற மார்க்ஸியத்துக்கு எதிராக தான் அறிந்த யாழ்ப்பாண மனிதனை பகுத்துக்காட்டிக் கொண்டிருந்தவர். அவன் காமமும் குரோதமும் நிறைந்தவன். ஆசைகளினால் அலைப்புறுபவன். உறவுகளில் சிக்கி தடுமாறுபவன். வாழ்தலுக்கும் இருத்தலுக்கும் இடையேயான சஞ்சலமாக வாழ்க்கையை அறிபவன். மீண்டும் மீண்டும் எஸ்.பொன்னுத்துரை இம்மனிதனைச் சித்தரித்து, அவனை மார்க்ஸியம் காட்டிய வரலாற்றுவாதத்துக்கு எதிராக முன்வைத்தார். மனிதனின் வற்றாத வாழ்வாசையையும் அதன்பொருட்டு அவன் கொள்ளும் போராட்டத்தையும் அதன் விளைவாக அவன் உருவாக்கிக் கொண்டுள்ள நெறிகளையும் அவனது சாரமாகக் கண்டார். மார்க்ஸியர்கள் சொன்ன முற்போக்கு வாதத்துக்கு எதிராக எஸ்.பொன்னுத்துரை முன்வைத்த ‘நற்போக்கு’ வாதம் இதுவேயாகும்.

நற்போக்கு வாதத்தை எஸ்.பொன்னுத்துரை ஒரு கோட்பாட்டாளனாக முன்வைக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதை தெளிவாக வகுத்துக் கூறவோ அதை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கவோ செய்யவில்லை. கோட்பாட்டுநோக்குக்கு எதிரான படைப்பிலக்கியவாதி என்ற முறையில் எஸ்.பொன்னுத்துரையின் இந்த இயல்பை விளங்கிக் கொள்ளலாம். எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடும் மு.தளையசிங்கம் அவரது ‘நற்போக்கு’ தெளிவாக வரையறை செயப்படாத குழப்பம் என்று சொல்கிறார். [ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி] ஆனால் மு.தளையசிங்கத்தின் ‘பிரபஞ்ச யதார்த்தமும்’ அதேயளவுக்கு குழப்பமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதைச்சார்ந்து மு.தளையசிங்கம் முன்வைக்கும் வரிகளில் உள்ள படைப்பூக்கமே நம்மை அவர் சொல்வதென்ன என்பதை உணரச்செய்கிறது. இவ்வியல்புக்குக் காரணமே இவ்விருவரிடமும் உள்ள இலக்கிய எழுச்சிதான்.

எஸ்.பொன்னுத்துரையின் நற்போக்குவாதம் இன்றைய வாசகனுக்கு முக்கியமல்ல என்றே எனக்குப் படுகிறது. அன்றைய இலக்கிய விவாதங்களில் தன்னை நிறுவும் பொருட்டு எஸ்.பொன்னுத்துரை உருட்டி விட்ட ஒரு பாறை மட்டுமே அது. ஒரு புனைவிலக்கியவாதியாக மட்டுமே எஸ்.பொன்னுத்துரை பொருட்படுத்த தக்கவர் என்பதே உண்மை. மார்க்ஸியர்களின் கூற்றுக்களை அவர் நிராகரித்தமைக்குக் காரணம் அவற்றின் தர்க்கமுறைகளை அவர் கூர்ந்து அவதானித்து உள்வாங்கியமை அல்ல, அவர்கள் சொன்ன முடிவுகளும் முன்வைத்த படைப்புகளும் எஸ்.பொன்னுத்துரையின் படைப்புமனத்தால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதனவாக இருந்தமையே. எஸ்.பொன்னுதுரை அன்றைய மார்க்ஸியக் கோட்பாட்டு மேலாதிக்கத்துக்கு எதிராக தன் படைப்புகளையும், அவற்றின் படைப்பாளியாக தன்னையுமே முன்வைத்தார்.

எஸ்.பொன்னுத்துரை தன் நற்போக்கு வாதத்தை ஒரு கோட்பாடாக முன்வைக்கவில்லை எனபதற்கு முக்கியமான காரணம் அவரது படைப்புமனம் மனிதமனங்களின் இருளையும் ஆழத்தையும் மட்டுமே பொருட்படுத்துவது, காமகுரோதங்களின் அலைகளை சொற்களால் தொட்டு உருவாக்கிக் காட்ட முயல்வது என்பதே. அத்தகைய படைப்பாளி முற்போக்கு வாதத்தையும் ஒரு கோட்பாட்டாகவோ கருத்துநிலையாகவோ காணவில்லை. அதை மனிதர்கள் கொள்ளும் பல்வேறுவகையான சுயபாவனைகளில் ஒன்றாகவே அவர் காண்கிறார். தன்னை பலவகையாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது. தனக்குத்தானே காட்டிக் கொள்ளுதல், பிறருக்குக் காட்டிக் கொள்ளுதல். தன்னகங்காரம், தன்னிரக்கம் என அதற்கான காரணங்கள் ஏராளமானவை.அந்த ஆழங்களுக்குள் செல்லும் எஸ்.பொன்னுத்துரை  முற்போக்குவாதத்தை முன்வைத்தவர்களின் தனிப்பட்ட ஆளுமைச்சிக்கல்களையே ஆழமாக கவனிக்கிறார். பொதுவான நோக்கில் அவரது முற்போக்கு எதிர்ப்பு என்பது தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இலக்கிய அரசியலை விட்டு மேலெழாததாகவோ தோன்றலாம். ஆனால் வரலாற்றையே தனிமனித அகநிலைகளின் ஒட்டுமொத்த விளைவாக நோக்கிய ஒரு இலக்கியவாதியால் கோட்பாடுகளையும் அப்படித்தான் அணுக முடியும் என்பதே கவனிக்க வேண்டியது

இன்னும் ஒரு முக்கியமான கூறு இதில் உண்டு. ஈழச்சூழலில் உழைக்கும் மக்களுக்கான முற்போக்குவாதத்தை முன்வைத்து படைப்பிலக்கியத்தளத்தில் மேலாதிக்கம் புரிந்தவர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிரான நில உடைமைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்.பொன்னுத்துரை உழைக்கும் மக்களின் அடித்தட்டைச் சேர்ந்தவர். ஆகவே இயல்பாகவே அவருக்கு இத்தகைய கோஷங்களிலும் கோட்பாடுகளிலும் ஐயம் இருந்ததும் அவற்றை ஓங்கிச்சொன்னவர்களின் அந்தரங்கத்தை அவர் கூர்ந்து கவனிக்க முயன்றதும் இயல்பானதேயாகும்.

எஸ்.பொன்னுத்துரை மனித மனத்தின் ஆன்மீகக்கூறுகள் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அவரது படைப்புலகம் முற்றிலும் லௌகீகமானது. காமகுரோதமோகங்களின் நுண்மையை பற்றி மட்டுமே அவரது படைப்புக்கண்கள் கவனம் கொள்கின்றன. இந்நிலையில் அவர் சொல்லும் ‘நற்போக்கு’ என்பதை நாம் தத்துவ, அரசியல் தளங்களில் வைத்து பொருள் காணமுடியாது. அதற்கு ஒழுக்கம் சார்ந்த பொருள் மட்டுமே அளிக்கபப்ட இயலும். அவரது போக்கில் உள்ள ‘நற்’ என்ற விகுதியானது மரபான முறையில் ஒழுக்கநோக்கையே சுட்டுகிறது என்று தோன்றுகிறது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று கூறா நேர்மை, பாலியல் நேர்மை, பொருளியல் நேர்மை முதலியவற்றையே எஸ்.பொன்னுத்துரை தன் இலக்கிய அரசியல் கட்டுரைகளிலும் சுட்டிச் செல்கிறார்.

ஆனால் எஸ்.பொன்னுத்துரை மரபான முறையிலான ஒழுக்கவாதி அல்ல. அவரைப்பொறுத்தவரை வெளிபப்டையாக இருப்பது என்பது  நேர்மையாக இருப்பது என்பதற்குச் சமமானது. பாவனைகளே பாவம். குடி,விபச்சாரம் என நம் மரபு விலக்கும் எதையுமே விலக்காகக் கருதாத ஒரு நோக்கு எஸ்.பொன்னுத்துரை படைப்புலகில் உள்ளது. தன்னை தான் ஆக முன்வைத்தலையே பேரறமாக அவர் மீண்டும் மீண்டும் உத்தேசிக்கிறார்.’சத்தியத்துக்கு அதன் இயல்பே வடிவு. அதனை அழகுபடுத்தும் எத்தனம் அதர்மம். பொய்மைக்கும் போலிக்கும்தான் அலங்காரத்தேவை… சத்தியத்தினை விசுவாசிக்காத இலக்கியவாதி தன் ஊழியத்தின் ஆன்மாவையே இழந்துவிடுகிறான்…”  என்று சொல்லும் எஸ்.பொன்னுத்துரை சத்தியம் என்பதை எப்படி வரையறைசெய்கிறார்? ”ஆனால் இலக்கியவாதி என்ற முறையில் எனக்கு மானுஷீகத்தின் அமரத்துவத்திலே நம்பிக்கை இருக்கிறது.” எஸ்.பொன்னுத்துரைவின் நோக்கில் மனிதனை ஒட்டுமொத்தமாக நோக்கும் மனிதமைய நோக்கும் அவனது உள்ளார்ந்த நன்மை மீதுள்ள நம்பிக்கையுமே ‘சத்தியம்’ என்பது. அந்த சத்தியத்துக்கு மாறானவற்றைக் காண்கையில் ஏற்படும் சினம் அவரது ஆளுமையின் பகுதியே ”என்னுள் வாழும் அம்சங்களிலே தூக்கலானது சினம். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். புத்திஜீவியாக வேஷம் புனைவதிலும் பார்க்க ஆத்திரக்காரனாக வாழ்வது மேலானது…” இந்த அம்சங்களையே அவரது நற்போக்கு வாதமாக நாம் காண்கிறோம் [ 'அவா' தொகுதிக்கு முன்னுரை]

மார்க்ஸியராகத் தொடங்கி மார்க்ஸியர்களின் அந்தரங்க நேர்மையை ஆராய்வதனூடாக மார்க்ஸியத்தை விட்டு விலகி தனிமனிதவாதம் வழியாக நவீனத்துவத்தின் படிகளில் கால் வைத்தவர் என எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடலாம். அவரது தேடல் நவீனத்துவத்திற்குள் ஓர் ஏற்கத்தக்க ஒழுக்கவியலை நோக்கியே என்றும் சொல்லலாம்

[ 3 ]

 

தமிழ்இலக்கிய உலகில் எஸ்.பொன்னுத்துரைவுடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி என்று ஆ.மாதவனைச் சொல்லலாம். பொதுக்கூறுகள் என ஒரு வாசகனுக்குத்தோன்றக்கூடியவை இவை. காமகுரோதமோகங்களின் விளைநிலமாகவும் விளையாட்டரங்காகவும் மனித மனத்தைக் கண்டு அவற்றைச் சித்தரிப்பதிலேயே தன் கலையை கையாண்டமை 2. நுண்சித்தரிப்புகள் வழியாக எளியமனிதர்களைக் காட்டியமை 3. சம்ஸ்கிருதம் கலந்த அலங்கார மொழிக்கான மோகம் 4. தனிமனித நேர்மையை மாறாவிதியாகக் கொண்ட ஒழுக்கமைய நோக்கு.

ஆ.மாதவனின் உலகம் மானுடத்தீமையின் முடிவிலாத வகைபேதங்களைச் சொல்லிச் சொல்லித் தீராது விரியும் ஒரு தளம் [பார்க்க: இவ்வாசிரியரின் 'தீமை நடமாடும் தெரு- ஆமாதவனின் படைப்புலகம்'] எஸ்.பொன்னுத்துரைவின் பெரும்பாலான படைப்புகளும் இத்தளத்தைச் சார்ந்தவையே. இருவருக்குமே காமம் ஒரு முக்கியமான பேசுபொருள். குறிப்பாக காமம் கொள்ளும் வேடப்புனைவுகளும் மாயங்களும். நாம் சாதாரண வாசிப்பில் மாதவன் திரும்பத்திரும்ப ஆஷாடப்பூதிகளைச் சாடி எழுதியிருக்கிறார் என்று எண்ணக் கூடும். உண்மையில் அக்கதைகளில் அவற்றை கவனிப்பவனின் பதற்றமும் ஆர்வமும் கூடவே பதிவாகியிருப்பதனாலேயே அவை முக்கியமான உள ஆய்வுகள் ஆகின்றன. எஸ்.பொன்னுத்துரைவின் படைப்புகளைப்பற்றியும் இவ்வரிகளைச் சொல்லலாம்.

எஸ்.பொன்னுத்துரை,ஆ.மாதவன் இருவரிடமும் ·ப்ராய்டியப் பாதிப்பு உண்டு. இருவருமே ·ப்ராய்டின் கோட்பாடுகளைப் படித்து அவற்றை தங்கள் படைப்புகளில் கையாண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இருவரும் தங்களைச்சுற்றி கண்ட வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் அன்றிருந்த சூழலில் பேசப்பட்ட ·ப்ராய்டியத்தைக் கொண்டு நியாயப்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்லலாம். காமத்தை ஒரு பாவமாகவோ, ஒழுக்க மீறலாகவோ காணாமல் மானுட உறவுகளின் இயல்பான நிலையாகக் காண இவர்களுக்கு ·ப்ராய்டியம் உதவியிருக்கிறது. காமம் மனித அகத்தின் இயல்பான ஆழம் என்பதை நம் மரபு கற்பித்திருந்தாலும் அதற்கு ஒரு ·ப்ராய்டிய அடிக்கோடு மிக உதவியாக இருந்திருக்கலாமென படுகிறது.

இருவருமே அதிகமும் நடுத்தர, அடித்தட்டு மக்க¨ளைப்பற்றி எழுதினார்கள். ஆனால் ஆ.மாதவன் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்க¨ளைப்பற்றி எழுதிய அளவுக்கு எஸ்.பொன்னுத்துரை எழுதவில்லை. யாழ்ப்பாணத்து நடுத்தர வற்கத்தின் பாவனைகளிலேயே அவரது மனம் அதிகமும் லயிக்கிறது என்று தோன்றுகிறது. ஆ.மாதவன் உலகில் பசியும் வன்முறையும் காமம் அளவுக்கே முக்கியமான கூறுகளாக இருக்கின்றன. எஸ்.பொன்னுத்துரை அவற்றை படைப்புரீதியாகப் பெருமளவுக்குப் பொருட்படுத்தவில்லை. ஆ.மாதவன் கதைகளுக்கு திட்டவட்டமான ஒரு ‘இட’ சூழல் உள்ளது, திருவனந்தபுரம் சாலைத்தெரு. ஆனால் எஸ்.பொன்னுத்துரை பொதுவாக ஒரு யாழ்ப்பாணச் சூழலையே களமாகக் கொண்டிருக்கிறார். ‘சடங்கு’ மட்டுமே திட்டவட்டமான நில அடையாளத்துடன் இருக்கிறது. ஒரு கதைநிலம் நுட்பமான முறையில் கதைமாந்தரின் அகஓட்டங்களுடன் பிணைக்கப்படும்போது ஆழமான குறியீட்டுத்தன்மை அதற்கு கைகூடுகிறது. ஆ.மாதவனின் சாலைத்தெரு அப்படி ஒரு குறியீடாகவே வளர்ச்சி கொள்கிறது. அது எஸ்.பொன்னுத்துரை கதைகளில் நிகழ்வதில்லை.

இருவருக்குமே புராண,ஐதீகக் கதைகளில் உள்ள ஆர்வமும் சம்ஸ்கிருதம் கலந்த அலங்கார மொழியை பயன்படுத்துவதில் உள்ள மோகமும் கவனத்திற்கு உரியவை. என் வாசிப்பில் இவ்வம்சத்தை எதிர்மறையான ஒன்றாக, படைப்புத்தன்மையுடன் மேலெழாத மொழிப்பயிற்சியாகவே இருவரிடமும் காண்கிறேன். ஆ.மாதவன் ஆரம்பகாலத்தில் எழுதிய இத்தகைய கதைகள் பெரும்பாலானவற்றை நிராகரித்து அச்சில் கிடைக்காதபடிச் செய்துவிட்டார். அவரது கதைகளுக்குள் ஆங்காங்கே ஊடாடிச் செல்லும் சில வரிகளாகவே நாம் இப்போது இவற்றைக் காணமுடிகிறது. எஸ்.பொன்னுத்துரையின் கதையுலகில் கணிசமான ஒரு பகுதியை இவ்வகை எழுத்து நிரப்பியிருக்கிறது. அவரது எழுத்தில் பெருமளவு பொருட்படுத்தத் தக்கதல்ல என்று நான் எண்ணும் பிராந்தியம் இதுவே. இக்கூறு எஸ்.பொன்னுத்துரையைப்பொறுத்தவரை ஒரு மேடைசார்ந்த திறனாட்டமாக மட்டுமே இருக்கிறது.

எஸ்.பொன்னுத்துரை ,ஆ.மாதவன் இருவரையுமே இயல்புவாதிகள் [Naturalists] என்று சொல்லலாம். இயல்புவாதம் யதார்த்தவாதத்தின் ஒரு தீவிரநிலை என்று பொதுவாகப் புரிந்துகொள்ளலாம். இலட்சியவாத, அகஎழுச்சி சார்ந்த கூறுகள் எதுவுமே இல்லாத தூய உலகியல் நோக்கு, துல்லியமான தகவல்களைச் சார்ந்து இயங்கும் போக்கு, கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமோ கனிவோ இல்லாத கறாரான சித்தரிப்பு போன்றவை இயல்புவாதத்தின் அடிப்படைக்கூறுகள். இலட்சியவாதம் இல்லாத மானுட அகச்சித்தரிப்பு என்பது உடனடியாக காம குரோத மோகங்களின் விவரிப்பாக மாறிவிடும் என்பதனால் இந்த ‘தீமைச்சித்தரிப்பு’ தன்மையை நான் இயல்புவாதத்தில் இருந்து விலக்கிவிட முடியாது. இயல்புவாதத்தின் முன்னோடியான எமிலி ஜோலா முதல் இதை நாம் காண்கிறோம். [இயல்புவாதம் தமிழில் வருவதற்கு முந்தைய ஒரு கட்டத்தில் எமிலி ஜோலாவின் படைப்புகள் சில தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன] ஆ.மாதவனின் ‘எட்டாவது நாள்’ போன்ற கதைகள் தீமைச்சித்தரிப்புத்தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

தமிழின் இயல்புவாத எழுத்தின் தொடக்கப்புள்ளிகள் என ஆ.மாதவனையும், நீல பத்மநாபனையும் சொல்லலாம். எஸ்.பொன்னுத்துரையின் சடங்கு தமிழின் சிறந்த இயல்புவாத இலக்கியப்படைப்புகளில் ஒன்று. அவ்வெழுத்துமுறைக்கு தமிழின் பண்பாட்டுச்சூழல் சார்ந்து ஒரு பங்களிப்பு எப்போதும் இருக்கிறது. அது தொடர்ந்து இங்கே வளர்ந்துகொண்டிருக்கிறது. பூமணி அடுத்த தலைமுறையின் முக்கியமான இயல்புவாத எழுத்தாளர். சுப்ரபாரதி மணியன், சூரியகாந்தன், சி.எம்.முத்து,சி.ஆர்.ரவீந்திரன்,சோலை சுந்தரப்பெருமாள் என அடுத்த தலைமுறையில் தொடர்ந்த அவ்வெழுத்துமுறை இமையம்,பாமா,சொ.தருமன்,அழகியபெரியவன் போன்ற தலித் எழுத்தாளர்கள் எழுதவந்தபோது திடீரென்று பேருருவம்கொண்டு தமிழின் முக்கியமான இலக்கிய அலையாக மாறியது. கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால்,எம்.கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமான படைப்பாளிகளுக்கன அழகியலாக அது இன்று உள்ளது.

இதற்கான காரணங்கள் பல. பொதுவாக தமிழகம் அதன் வாழ்க்கைவிரிவின் பெரும்பகுதி இலக்கியரீதியாகப் பொருட்படுத்தப் படாமல் விடப்பட்டதாகவே உள்ளது. சொல்லப்போனால் எழுதப்படாத வாழ்க்கையே இங்கே அதிகம். அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதென்ற போதமே இல்லாதது நம் பண்பாட்டுச் சூழல். ஆகவே அந்த தளங்களிலிருந்து இலக்கியவாதிகள் உருவாகி தங்கள் வாழ்க்கையைச் சொல்லப்புகுந்த போது ‘அப்படியே’ சொல்வதான பாவனை கொண்ட இயல்புவாதம் ஓர் அழகியல் கருவியாக அவர்களுக்கு உதவியது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் யதார்த்ததை சொல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இயல்புவாதம் உருவான சூழலுக்கு பெரிதும் சமானமாக இருக்கிறது.

ஈழச்சூழலில் முற்போக்குமுகாமானது யதார்த்தவாதத்தை தன் அழகியலாக முன்வைத்தபோது அதற்கு எதிரான அழகியலாக தன் இயல்புவாதத்தை எஸ்.பொன்னுத்துரை முன்வைத்ததை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். முற்போக்கு யதார்த்தவாதம் என்பது இலட்சியவாத உள்ளடக்கம் கொண்டது. இலட்சியவாதநோக்குக்கு ஏற்ப புலன்களும் தர்க்கமும் அறியும் யதார்த்ததை மறு ஆக்கம் செய்து முன்வைக்கும் தன்மை கொண்டது.தன் இலட்சியவாதத்தை அது கோட்பாடாக உருமாற்றிக் கொண்டு தன்னை  அமைப்பு ரீதியாக திரட்டிக் கொண்டும் உள்ளது.

எஸ்.பொன்னுத்துரை முற்போக்கு முகாமில் இருந்து வேறுபடுவது எங்கே? அவரே சொல்வதுபோல அவர் ‘முன்னரே’ முற்போக்காகவும் இடதுசாரியாகவும் ஆகிவிட்டவர். ”தோழர் ஜெயகாந்தன் ஜனசக்தி காரியாலயத்தில் புகுந்து எழுத்துப் ‘பயிற்சி’ பெறுவதற்கு முன்னரே எழுத்தாளன் என்ற மிடுக்குடன் கம்யூனிஸ்டுக் கட்சிப்பணிகளிலே என்னை இணைத்துக் கொண்டவன் நான்.” என்று சொல்லும் எஸ்.பொன்னுத்துரை ”மாஸ்கோ-பீகிங் வாதப்பிரதிவாதங்களினால் மனம் புழுங்கி கட்சி அரசியலில் இருந்து நான் ஒதுங்கிக் கொண்டாலும் மார்க்ஸிஸ சித்தாந்தத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பு இம்மியளவும் தளர்ந்துவிடவில்லை” என்கிறார்.[சில நேரங்களில் சில தோழர்கள்] ஆக அவரைப்பொறுத்தவரை முரண்படும் அம்சம் என்பது இரண்டுதான், முற்போக்கு முகாமின் வரட்டுத்தனமான கோட்பாட்டுக்கூச்சலால் வாழ்க்கையை அளக்கும் முறை. அவ்வமைப்பில் உள்ள தனிநபர்களின் தனிப்பட்ட குணச்சிக்கல்கள்.”கூட்டத்தில் ஒருவன் என்றாலும் செம்மறிக்கூட்டத்தில் ஒருவனல்லன். பழைய வழிகளிலே நடந்து கற்பனை வேலி வரை முன்னேறியவன்.. அவன் துணிந்தவன். கூச்சலை நிறுத்தி எல்லையைக் கடந்தான்….” என்று தன்னைப்பற்றி சொல்கிறார்.[அவா]

இந்நிலையில் மார்க்ஸியலட்சியவாதமோ, அதன் கோட்பாட்டு அமைப்போ இல்லாத ஓரு யதார்த்தவாதமே எஸ்.பொன்னுத்துரையின் இலக்கிய அழகியலாக அமைய முடியும். அவரது கறாரான வாழ்க்கை நோக்கும், ஆன்மீக மறுப்பும் அவரை எளிதாக இயல்புவாதத்தை நோக்கி இட்டுச்சென்றிருக்கிறது. மனிதமனத்தைச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி இலட்சியவாதத்தையும் அதன் வெளிப்பாடான மனிதாபிமானத்தையும் விலக்கிவிடுவானாகில் அது இயல்புவாதமாகவே மாறிவிடும். மார்க்ஸிய இலட்சியவாதத்தை மறுக்கும் ஆன்மீக இலட்சியவாதங்களை விடவும் இதையே மார்க்ஸியர் அபாயகரமானதாகக் கண்டு நிராகரிப்பார்கள். இதை தமிழ்நாட்டிலும் காணலாம். நீல பத்மநாபன், ஆ.மாதவன் போன்றவர்கள் வலதுசாரிகள் அல்ல. அவர்களும் எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையை எழுதியவர்களே. சொல்லப்போனால் மேலும் தீவிரமாக எழுதியவர்கள். ஆனால் மார்க்ஸியர்கள் இங்கே அவர்களை பொருட்படுத்தவே இல்லை. பூமணிக்கும் சின்னப்பபாரதிக்கும் என்ன வேறுபாடு? பூமணியில் சின்னப்பபாரதியில் உள்ள இலட்சியவாத அம்சம் இல்லை. இன்னும் கறாரான யதார்த்தச் சித்தரிப்பு உள்ளது. ஆகவே பூமணியை மார்க்ஸியத் தரப்பு நிராகரித்தது, பின்னர் உதாசீனம் செய்தது. இன்றும்  அவரை  அது தம்மவராக எண்ணவில்லை.

ஆகவே ஈழ முற்போக்கு முகாம் எஸ்.பொன்னுத்துரையை நிராகரித்ததையும் எதிர்த்ததையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நவீன இலக்கியவாதிகள் மேல் முற்போக்கு முகாம் போடும் எல்லா முத்திரைகளும் அவர் மீது போடப்பட்டன.’ஆபாச எழுத்தாளர்’ ‘தனிமனித வாதி’ ‘இருண்மையான எழுத்துமுறை கொண்டவர்’ என்று அவர் குற்றம் சாட்டப்பட்டார். இன்றைய வாசகன் எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ குறுநாவலை வாசிக்கும்போது அது சற்று அழுத்தமான குரலில் பேசும் ஒரு வகை முற்போக்கு இலக்கியமாகவே எண்ணுவான். ஒரு நடுத்தர வற்க எளியமனிதனின் சாரமில்லாத வாழ்க்கையின் சில நாட்களைச் சொல்வது வழியாக இந்த சமுக அமைப்பும் பொருளியல் அமைப்பும்  அவனைக் கட்டிப்போட்டிருக்கும் எல்லையையைப்பற்றிய நம்பகமான சித்திரத்தை அவனுக்கு அது அளிக்கிறது என்று அவன் எண்ணுவான். ஆனால் அப்படைப்பு அக்காலகட்டத்தில் மார்க்ஸியர்களின் பெரும் எதிர்ப்பையும் வசைகளையும் பெற்றிருக்கிறது. அதில் எந்தவித இலட்சியவாதமும் இல்லை. விடுதலைக்கான குரலே இல்லை.சமகாலத்து ஒழுக்க எல்லைகளைத்தாண்டிச் சென்று பேசமுனைகிறது– போதாதா?

எஸ்.பொன்னுத்துரையை இயல்புவாதம் மூலம் முற்போக்கு முகாமின் கோட்பாட்டு மேலத்திக்கத்தை எதிர்கொண்ட படைப்பாளி என்று வகுத்துக் கொள்ளலாம். அவரை ஆ.மாதவன், நீல பத்மநாபன் வரிசையில் முன்னோடி இயல்புவாத படைப்பாளியாக எண்ணலாம். இன்றும் தமிழின் முக்கியமான அழகியல்முறையாக நீளும் இயல்புவாதத்தின் வழிகாட்டியாக மதிக்கலாம்.

[ 4 ]
இயல்புவாத அழகியலின் முக்கியமான சிறப்பே அது அளிக்கும் நுண்தகவல்கள்தான். தகவல்கள் மட்டுமே பாரபட்சமில்லாத, புறவயமான உண்மைகள் என்ற நிரூபணவாத அறிவியலில் இருந்து உருவான இலக்கிய முறை என்றே இயல்புவாதத்தைச் சொல்லிவிடலாம். ஆசிரியரின் உணர்ச்சிகள் மட்டுமல்லாமல் கதைமாந்தரின் உணர்ச்சிகளையும் பொருட்படுத்தாத ‘புறவய’ மான எழுத்துமுறை இது. உணர்ச்சிகளைப்பற்றிச் சொல்வதானால்கூட அவற்றையும் ஒருவகை தகவல்களாகவே முன்வைக்கக் கூடியது.

இயல்புவாதத்தின் தனித்தன்மை என்னவென்றால் ‘பெரிய’ தகவல்களை மட்டும் முன்வைக்கும் பொதுவான யதார்த்தவாத முறையில் இருந்து அது வேறுபடும்விதம்தான். ஒருதகவலை முக்கியமானதாகவோ அழுத்தமானதாகவோ ஆக்குவது அதற்கு ஆசிரியர் கொடுக்கும் நோக்கம்தான். அந்த நோக்கம் கோட்பாடு சார்ந்தது, இலட்சியவாத இலக்கு கொண்டது. இயல்புவாதம் எல்லா தகவல்களையும் தகவல்களாகவே சொல்ல முயல்கிறது. அதன் புனைவின் குறிப்பிட்ட வட்டத்திற்குள் வரக்கூடிய எல்லாத்தகவல்களையும் சொல்லிவிடுவதான புனைவுப்பாவனையை அது கொண்டுள்ளது[ எல்லா தகவல்களையும் எவருமே சொல்ல முடியாதல்லவா?] சமீபத்திய உதாரணம் என்றால் சு.வேணுகோபாலின் படைப்புகளைச் சொல்லலாம். வேளாண்மைவாழ்வு குறித்த நுண்ணிய தகவல்கள் மிகச்செறிவாக வரிக்குவரி நெருக்கிக் கொண்டிருக்கும் எழுத்துமுறை அவருடையது. உளுந்துவயல் என்று சொல்லமாட்டார். எந்தவகை மண்ணுள்ள நிலம், எந்த காலம், நீர் வசதி எப்படி, எந்தவகை உளுந்து,எந்த நிலையில் இருக்கிறது எல்லாமே ஒரே சொற்றொடருக்குள் இருக்கும், அந்தக் கதாபாத்திரத்தின் புறச்சூழலைச் சொல்ல இத்தனை தகவல்கள் தேவையா என்ற வினாவுக்கே அந்த புனைவுத்தளத்தில் இடமிருப்பதில்லை.

இத்தகைய இயல்புமூலம் இயல்புவாதமானது செவ்வியலுக்கு ஒருவகையில் நெருக்கமாக வருகிறது. செவ்வியல் படைப்புகளின் அழகியலில் இரு முக்கியமான அம்சங்கள் எப்போதும் சுட்டப்படுகின்றன. ஒன்று, சமநிலை. இரண்டு, நுண்செறிவு. இலையெல்லாம் பூவாக மாறிய மரம்போன்றது செவ்வியல். அணிகள்,சொல்லழகுகள், தரிசனங்கள் என அதன் பரப்பு நுண்மைகளால் செறிந்துள்ளது. நமது கோயில் தூண்களைப்போல. ‘Art is in details’  என்று செவ்வியல் சொல்கிறது ஏனென்றால் ‘God is in details’  என்று அது கண்டறிந்துள்ளது. மேலும் தன் கலைவெளிப்பாட்டுக்கு நுண்மையின்செறிவை அது வழிமுறையாகக் கொண்டிருப்பதனால் நேரடியான உணர்ச்சிப்பெருக்குகளையும் ஆசிரியர் குரலையும் அது நம்புவதில்லை. அதன் அனைத்து வெளிப்பாடுகளிலும் சமநிலை உருவாகி வருகிறது. இதேபோல புறவயமான தகவல்களை செறிவாக அளிப்பதன் வழியாக இயல்புவாதமும் சமநிலை நுண்செறிவு இரண்டையும் அடைகிறது.

எஸ்.பொன்னுதுரையின் படைப்புகளில் உள்ள இயல்புவாத ஆக்கங்களின் முக்கியத்துவம் யாழ்ப்பாண வாழ்க்கையைப்பற்றிய அதன் நுண்சித்தரிப்பில்தான் உள்ளது என்றால் மிகையல்ல. பொதுவாக தமிழக வாசகன் ஈழப்படைப்புகளைப் படிக்கும்போது அடையும் சோர்வு என்னவென்றால் எத்தனை பக்கங்கள் படித்தபின்னரும் அங்குள்ள நிலமோ, சூழலோ, இயல்பான வாழ்க்கையோ கண்ணுக்குத்தெரிவதில்லை என்பதே. குறிப்பாக செங்கை ஆழியான், தேவகாந்தன் போன்றவர்களின் நீண்ட நாவல்களைப் படிக்கும்போது அவை ஒரு நிலமில்லாத ஓர் அந்தர வெளியில் நின்றுகொண்டிருப்பதான எண்ணமே எழுகிறது. ஈழச்சூழலில் வெகுசில படைப்பாளிகளிடம் மட்டுமே ஈழ மண்ணை நம்மால் காண முடிகிறது. என் நோக்கில் மு.தளையசிங்கத்தின் ‘ஒருதனிவீடு’ எஸ்.பொன்னுதுரையின் ‘சடங்கு’ ஆகிய இரண்டு படைப்புகளுமே அவற்றில் தலைசிறந்தவை.

நுண்தகவல்கள் என்றால் என்ன என்று சொல்வது எளிதல்ல. மக்களின் வாழ்க்கையின், பண்பாட்டின், உளப்போக்கின் பல நுண்ணிய அடித்தளங்களைத் தொட்டுக்காட்டும் தகவல்கள் சாதாரணமாக படைப்பில் பதிவாகியிருப்பது என்று அதைச் சொல்ல்லலாம். உதாரணமாக சடங்கு நாவலில் செந்திநாதன் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது கொழும்பில் ஓட்டலில் சாப்பிட்டு நாக்கு செத்த மருமகனுக்கு வகையாகச் சமைத்துப்போடும் பொருட்டு மீன் வாங்கச் செல்லும் அவரது மாமியார் கொல்லையில் மரத்தடியில் ஒதுக்கி போடப்பட்டிருந்த ‘கவிச்சிக்’ கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு செல்கிறாள். இது குமரிமாவட்டத்திலும் பல வேளாள,நாடார் இல்லங்களில் உள்ள வழக்கம். புலால் உண்பவர்களானாலும் அதன் மீது மானசீகமான ஒர் ஒதுக்கம். பல வீடுகளில் கொல்லையில் ஒரு மரக்கிளையில் அக்கூடை தொங்கிக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் வந்தபின் இப்போது இத்தகைய ஒரு கூடையே இனி எவர் கண்ணுக்கும் படாமலிருக்கக் கூடும். இலக்கியத்தில் பதிவாகவில்லை என்றால் அது ‘வரலாற்றில்’ இல்லாமலேயே போயிருக்கக் கூடும். அந்தக் கூடை பல மனநிலைகளுக்கான முக்கியமான சுட்டித் தகவல்.

சடங்கு குறுநாவலில் இத்த¨கைய நூற்றுக்கணக்கான தகவல்களினால் ஆன ஒரு நடை புழங்குகிறது. மாமியார்கிழவியின் செட்டையும் சிக்கனத்தையும் சொல்லும் தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன. மருமகனுக்கு அசைவ ‘விருந்து’ படைக்க ஒரே ஒரு முட்டையை உடைத்து பொரியல் செய்கிறார்கள். பிராய்லர் வருவதற்கு முன்னர் கோழிமுட்டை அத்தகைய ஓர் சிறப்பு உணவாக இருந்திருக்கிறது. சில தகவல்கள் உளம் சார்ந்த ஆழமான நோக்குக்கு இடமளிபப்வை. புதுமனைவியுடன் கடற்கரைக்குச் செல்கிறார் செந்திநாதன் . பின்னால் அமர்ந்திருக்கும் சில ஆசாமிகள் அவர் முதுகில் மணலை வீசுகிறார்கள். பின்பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் மனைவியை திரும்பக் கூட்டிவந்து விடுகிறார். அவரது குணச்சித்திரத்தை மட்டும் காட்டுவதல்ல இது. அன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையின் ஒரு கணம் இதில் உள்ளது. மணலை வீசும் மனநிலை. அதற்கு சிறு எதிர்ப்புகூட காட்டாமல் திரும்பிவரும் மத்தியவற்க ‘உத்தியோகஸ்த’ மனநிலை. [ எனக்கு இது ப.சிங்காரத்தை நினைவூட்டும் ஒரு இடம்] புன்னகையுடன் நாம் கடந்துசெல்லும் இத்தகைய தகவல்களே புனைவை இலக்கியமாக ஆக்குகின்றன.

‘சடங்கு’ நாவலை இப்போது படிக்கும்போது பலவகையான வினாக்களும் மனக்குழப்பங்களும் எழுகின்றன. இந்நாவல் உருவானபோது யாழ்ப்பாண வாழ்க்கையின் ஒரு கீற்றை உண்மையாகச் சொல்லும் ஆக்கமாகவும் மெல்லிய அங்கதம் கொண்டதாகவும் வாசகர்களுக்குத் தோன்றியது. அதன் இலக்கியகுணமாக இதுவே சொல்லப்பட்டது. அத்துடன் அதன் பாலியல் வர்ணனைகள் அந்தக் காலகட்டத்து அளவுகோலுக்கு துணிச்சலானவையாக இருந்தன. ஆனால் இன்று வாசிக்கும்போது இன்றைய போர்சூழ்ந்த யாழ்ப்பாணத்துக்கு முந்திய யாழ்ப்பாணத்தை கண்ணுக்குக் காட்டும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.

இன்று சடங்கு வழியாக நோக்கும்போது மிகுந்த வியப்புதான் உருவாகிறது. அது காட்டும் யாழ்ப்பாணம் பொதுவாக எந்த வன்முறையும் இல்லாத நடுத்தர வற்கத்து மனிதர்கள் நெருக்கமான உறவுகளுடன் ஒருவரை ஒருவர் அள்ளிப்பற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் உறிஞ்சிக் கொண்டு லௌகீகத்தில் முற்றிலும் ஆழ்ந்து வாழும் காட்சியையே காண்கிறோம். குறிப்பாக சடங்கு நாவலில் அன்றைய யாழ்ப்பாணத்தை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கும் கதாபாத்திரம் அந்த மாமியார்தான் என்று படுகிறது. ஒவ்வொரு கணமும் அவர் சேமித்துக் கொண்டே இருக்கிறார். புத்தி, ஆத்மா எல்லாமே நாளைய வாழ்க்கைக்கான சேமிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அப்பால் அன்றாட வாழ்க்கை என்று ஏதும் இல்லை. இன்பங்கள் இல்லை. ஆன்மீகம் இல்லை. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலமாக கேரளத்தில் இருந்துவந்த வாழ்க்கை. இன்று தமிழ்நாட்டில் உருவாகியுள்ள வாழ்க்கை. சில வருடங்களுக்குள் இம்மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள் என்று எவரும் அந்நாவலை முன்வைத்துச் சொல்லிவிட முடியாது. அதுவே வாழ்க்கையின் தீராத விந்தை!

நுண்தகவல்கள் மூலம் உருவாகும் கலைக்குச் சிறந்த உதாரணமாக அமையும் பல கதைகளை எஸ்.பொன்னுதுரையின் புனைவுலகுக்குள் காணலாம். அவரது பெருந்தொகையான எஸ்.பொ.கதைகளின் [மித்ர வெளியீடு] முதல்கதை ‘தேர்’ இதற்குச் சிறந்த உதாரணம்.யாழ்ப்பாணத்துச் சாதிசமயச் சமூகக் கட்டுமானத்திற்குள் ஊறி வளர்ந்த முகத்தாரின் ஒருநாள். அவரது ஒரு மகன் மட்டும் சிங்களத்துப் பெண்ணை மணம் செய்து மீறிச் சென்றவன். தொலைந்துபோன ஆடு. மற்றவர்கள் அனைவருமே ‘நன்றாக’ இருக்கிறார்கள். முகத்தாரின் உள்ளம் நுட்பமாக அந்த மகன் மீது சாய்வதை எந்தவிதமான வண்ணங்களும் இல்லாமல் சொல்லும் கதை இது. அதற்குக் காரணம் அம்மகன் மீதான தனிப்பட்ட பாசம் மட்டுமல்ல. அவன் தொலைந்து போனவன் என்பது மட்டுமல்ல. முகத்தாரின் உள்ளூர ஓடும் ஒரு சாரமான அறவுணர்வும் கூடத்தான். அவரே அறிந்திராதது அது.

முகத்தாரின் ஒருநாளை எஸ்.பொன்னுதுரை சின்னஞ்சிறிய தகவல்கள் மூலம் சித்தரித்துக் காட்டும் முறையெ அவரது கலையின் சிறந்த உதாரணமாக அக்கதையை ஆக்குகிறது. சரளமான யாழ்ப்பாணத்தமிழ் வழக்கு. ”என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டாலும் வீட்டிலை சின்னப்பிள்ளைதானே? சரியா? இவள் பார்வதிப்பிள்ளையை உரிச்சு வைச்ச மாதிரி இருக்குறள். இவளை ஒப்பேத்திப்பொட்டேனெண்டால் பேந்தென்ன?”

தமிழில் இயல்புவாதமும் வட்டார வழக்கும் பிரிக்க முடியாத படி உறவுள்ளவை. யதார்த்தவாதத்தின் தொடக்கப்புள்ளிகளான புதுமைப்பித்தன் போன்றவர்களே இங்கே வட்டார வழக்கின் முதல் இலக்கியப்பதிவுகளைச் செய்தார்கள். ஆனால் வட்டார வழக்கு ஓர் இலக்கிய அலையாக எழுந்தது தமிழில் இயல்புவாதம் எழுந்தபோதுதான். ஆர்வமூட்டும் பல சமநிலைகள் கொண்டது இந்த விஷயம். தமிழில் வட்டாரவழக்குக்காக ஆவேசமாக வாதிட்ட விமரிசகர் க.நா.சுப்ரமணியம்தான். இலக்கிய அழகியல் சார்ந்து க.நா.சுவை நவீனத்துவத்தின் பிரதிநிதி என்று வகுக்கலாம். நவீனத்துவத்தின் ஆசிரியர்மைய நோக்கு, தத்துவார்த்தநோக்கு போன்றவற்றை அவர் வலியுறுத்தினார். அவர் வாதாடிய நவீனக்கவிதை இவ்வியல்புகள் அனைத்தையுமே கொண்ட ஒன்று. ஆனால் உரைநடையில் அவர்  நவீனத்துவத்தின் இவ்வியல்புகளுக்கு இடமே இல்லாத இயல்புவாதத்துக்காக வாதாடியதாகப் படுகிறது.

உலகப்படைப்புகளை எடுத்து நோக்கினால் இயல்புவாதத்தின் முற்றிய நிலையே நவீனத்துவ அழகியலுக்கு வழிவகுத்தது என்று காணலாம். யதார்த்தவாதமானது இயல்புவாதம் வழியாகவே நவீனத்துவமாக முதிர முடியும். நவீனத்துவத்தின் விளைநிலமான பிரெஞ்சு இலக்கியத்திலேயே மாப்பசான் முதலிய யதார்த்தவாதப் படைப்பாளிகளில் இருந்து இயல்புவாதத்தின் முன்னோடிகளான எமிலி ஜோலா போன்றவர்கள் உருவாகி அவர்களின் நீட்சியாகவே காம்யூ உருவானார். காம்யூவில் எமிலி ஜோலாவின் பல அம்சங்களை நாம் வெளியே இருந்து வாசிக்கும்போது காண முடிகிறது. தத்துவார்த்தமாகப் பார்த்தோமென்றால் யதார்த்தவாதம் மானுட இயல்புகளை ‘அப்படியே’ சொல்ல முயல்கிறது. அதில் உள்ள இலட்சியவாத அம்சத்தை விலக்கி, வாழ்க்கையின் புறவய உண்மைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் இயல்புவாதம் மானுடனில் உள்ள அடிப்படை இச்சைகளையும் அச்சங்களையும் மட்டுமே அவனுடைய இயல்பாக காண்கிறது. ஆகவே இயல்புவாதம் இன்றியமையாத ஒரு இருண்மைநோக்கு கொண்டுள்ளது. அவ்விருண்மைநோக்கின், மனிதனைப்பற்றிய அவநம்பிக்கையின், முதிர்ச்சியே நவீனத்துவத்தின் சாரமாக அமைந்தது.

நவீனத்துவம் நவீன காலகட்டத்தில் மறுபிறப்பு பெற்ற செவ்வியல் என்று சொல்லலாம். செவ்வியலுக்குரிய தத்துவமைய நோக்கு, உணர்ச்சிச் சமநிலை, வடிவநுட்பம் , புறவயத்தன்மை ஆகியவற்றை அது தன் இலக்கியக்கோட்பாடாக முன்வைத்தது. இக்கூறுகள் பெருமளவுக்கு இயல்புவாதத்திலும் உள்ளன என்று காணலாம். புறவயமான தகவல்களை மட்டுமே நம்பி இயங்கும் இயல்புவாதம் உணர்ச்சிச் சமநிலை, வடிவ ஒருமை ஆகியவற்றை இயல்பாகவே அடைந்துவிடுகிறது. ஆகவேதான் நவீனத்துவத்திற்குரிய அழகியலாக பெரும்பாலும் இயல்புவாதம் அமைந்தது. எஸ்.பொன்னுத்துரை ஆ.மாதவன், பூமணி போன்ற நம் இயல்புவாதப் படைப்பாளிகளை நவீனத்துவர்கள் என்றும் சொல்ல முடிகிறது. எஸ்.பொன்னுதுரையின் ‘சடங்கு’ ஒரு நவீனத்துவ ஆக்கம் என்று வகுப்பது பொருத்தமானதேயாகும்.

இப்புலத்தில்வைத்து நோக்கும்போதுதான் இயல்புவாத அழகியலுக்காக வாதிட்ட க.நா.சுவின் நோக்கை நாம் புரிந்துகொள்ள முடியும். இயல்புவாதம் இந்தியச் சூழலில் எடுத்துக் கொண்ட பணி என்பது பலநூறு வாழ்க்கைத்தளங்களில் சிதறிப் பரந்து கிடக்கும் இந்திய யதார்த்தத்தைச் சொல்ல முற்படுவதேயாகும். அதுவரை எழுத்தில் சொல்லப்படாத வாழ்க்கைகள். சொல் தீண்டாத மனிதர்கள். அம்மக்களை அவர்களின் மொழியில் இருந்து பிரித்தறிய இயலாது என்பதே இயல்புவாதம் முதலில் கண்டடைந்த விஷயம்.  மலையாளம், கன்னடம்,வங்கம் போன்ற ஒப்புநோக்கப் புதிய மொழிகளில் வட்டாரவழக்குக் கொச்சை என்பது மைய மொழியில் இருந்து அத்தனைதூரம் விலகியதல்ல. தமிழில் அவ்வேறுபாடு மிகப்பிரம்மாண்டமான ஒன்று. இப்படி ஒரு மாபெரும் ‘மொழி அகழி’ வேற்றுப் பண்பாடுகளில் உண்டா என தெரியவில்லை. வட்டார வழக்கு என்பது எல்லா பண்பாட்டிலும் இருக்கக் கூடியதுதான் என்றாலும் தமிழ்ச் சூழலில் அது ஒரு சிறப்பான பண்பாட்டுக் கூறு.

அப்பண்பாட்டுக்கூறை இயல்புவாதம் வெளிப்படுத்தவேண்டும் என்று க.நா.சுப்ரமணியம் வாதாடினார். அவரது எதிர்பார்ப்புக்கு நிறைவூட்டும் விதமாக ஐம்பத்தெட்டில் நீல பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ வெளிவந்தது. பல வருடங்கள் அப்படைப்பை க.நா.சு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக முன்வைத்திருக்கிறார். தலைமுறைகள் பேச்சுவழக்கில் மட்டுமல்ல ஆசிரியர்நடையிலும் வட்டார வழக்கில் இயங்கும் நாவல். அதாவது அங்குள்ள மக்கள் மட்டுமல்ல அங்குள்ள பொருட்களும்கூட வட்டார வழக்கு வழியாகவே வடிவம் கொள்கிறார்கள். தமிழ் இயல்புவாதம் என்பது உண்மையில் வட்டாரவழக்கு அழகியலாகவே உள்ளது. இதை தமிழுக்குரிய ஒரு சிறப்பியல்பாக நாம் எண்ணலாம்.  இன்று சொ.தருமன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் வரை இவ்வியல்பு வளர்ச்சிகொண்டு வந்துள்ளது.

எஸ்.பொன்னுதுரையின் இயல்புவாதமும் வட்டார வழக்கில் ஆழ வேரூன்றியது என்பது இந்தப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். அவரது கதைமாந்தர் மட்டுமல்லாமல் பலசமயம் அவரேகூட கதைகளுக்குள் யாழ்ப்பாண வட்டார வழக்கில்தான் உரையாடுகிறார். அடித்தள மக்களின் நேரடி வாய்மொழியிலேயே பல கதைகள் அமைந்துள்ளன.”பக்கூஸ¤க்கதவு ஒள்ளம் கொழிஞ்சிருந்துது. கோழி கீழி வீட்டுக்குள்ள போய் எடுத்துவச்ச கூப்பன் அரிசிய குடுக்கெண்டு ஆன் நெனைச்சன். சூ என்டு விரசிக்கொண்டு உள்ளுக்க பாஞ்சு போனா எனக்கு நெஞ்சுக்க உலக்கையாலை இடிச்சதுபோலான் இருந்தது ” என்று கதைசொல்லியாலேயே மொத்தக் கதையும் சொல்லப்படுகிறது [விலை] எஸ்.பொன்னுதுரை இக்கதைகளை எழுதி கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் கழித்து வெளிவந்துள்ள விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ நாவல் இதே நடையில் இதே வாழ்வின் எச்சங்களை இதேபோலப் பேசுவது என்பதைக் கவனிக்கும்போது இவ்வழகியலின் பணி இன்றும் தொடர்வதை உணர முடிகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் சுப்ரபாரதி மனியனின் மாறுதடம் என்ற சிறுகதைத்தொகுப்புக்கு முன்னுரை வழங்கிய வாசகர் செழியன் [இப்போது திரைப்பட விமர்சகர். ஒளிப்பதிவாளர்-கல்லூரி] அக்கதைகள் புகைப்படத்தின் சட்டகம் போன்றவை என்றார். ஒரு சரியான சட்டகத்தை தெரிவுசெய்வதே அவற்றின் கலையாகும். அச்சட்டகத்திற்குள் அகப்படும் அனைத்துமே பதிவாகிவிடுகின்றன. அவற்றின் பொருளோ அவசியமோ அக்கலைஞனால் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சுப்ரபாரதி மணியனின் கதைகளில் மிக நுட்பமான காட்சித் தகவல்கள் வந்தபடியே இருக்கும். ஒரு தெரு என்றால் தெருவின் சகல குப்பைகளும் பதிவாகியிருக்கும். இவ்வழகியலை ‘புகைபப்டக் காட்சி’ என்று சரியாகவே பதிவுசெய்கிறார் செழியன். எஸ்.பொன்னுதுரை போன்ற படைப்பாளிகளின் இயல்புவாத அழகியலின் சிறப்பம்சமே இதுதான். அவர்களின் படைப்புநிலத்தில் உள்ள பொருட்கள் எவையுமே கதை மாந்தரின் உணர்ச்சிகளையும் கலைஞனின் உட்கருத்தையும் சுமந்து படிமங்களாக ஆவதில்லை. மிக எளிமையான ஒரு நேரடித்தன்மையுடன் அவை வாழ்க்கையையும் நிலத்தையும் ‘அப்படியே’ அள்ளிவிடுகின்றன. எஸ்.பொன்னுதுரையின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் பல அத்தகையவை. மு.தளையசிங்கத்தின் மிகக்குறுகிய இலக்கிய எழுத்துக்களைத் தவிர்த்தால் முந்தைய தலைமுறை ஈழ இலக்கியத்தில் சாதனை என்பது இது மட்டுமே என்பது என் எண்ணமாகும்

அவ்வகையில் ஈழ மண்ணை– இன்று பொய்யாய் பழங்கதையாய் மறைந்து போய்விட்ட ஒரு பண்பாட்டை- நமக்குக் காட்டும் ஒரே இலக்கிய ஆவணம் எஸ்.பொன்னுதுரையின் எழுத்துக்களே. ஆனால் இலக்கியத்தில் உள்ள வாழ்க்கை என்பது காட்டை விதைகளாக கையில் கருதுவது போல. நீர் கொண்ட இடத்தில் எல்லாம் காடுகளை நம்மால் உருவாக்கிக் கொள்ள இயலும்.

[  5  ]

எஸ்.பொன்னுதுரையின் படைப்புலகில் உள்ள மிகையுணர்ச்சியும் அலங்காரநடையும் கொண்ட கதைகளைப்பற்றி இன்றைய வாசகன் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இவை அக்கால வாசகர்களில் ஒரு சாராருக்கு கிளர்ச்சியூட்டுவனவாக அமைந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. லா.ச.ராமாமிருதத்தின் படைப்புலகுடன் இவை ஒப்பிடப்பட்டுள்ளன. அபூர்வமாக மௌனியுடனும். இன்று என் வாசிப்புக்கு இவை மிகுந்த பிரக்ஞையுடன் எழுதப்பட்ட மொழிச்சோதனைகளாக மட்டுமே தெரிகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழில் இயல்புவாத முன்னோடிகளில் சிலருக்கு இத்தகைய ஒரு நடைமீது ஏனோ மோகம் இருந்திருக்கிறது. நீலபத்மநாபன் பல கதைகளில் சம்ஸ்கிருத அலங்காரங்களை நாடியிருக்கிறார். ஆ.மாதவனுக்கும் அந்த மோகம் உண்டு.

இதற்கான காரணங்கள் சிலவற்றை நான் ஊகிக்கிறேன். தங்கள் இயல்பாலும், தாங்கள் தெரிவுசெய்துகொண்ட அழகியலாலும் மிக எளிமையான நேரடியான இயல்புவாத இலக்கியங்களை உருவாக்கிய இவர்களுக்கு அதிலிருந்து உருவான ஒரு போதாமையுணர்ச்சி எங்கோ ஒரு மூலையில் இருந்திருக்க வேண்டும். ஆகவே இந்த நடையை ஒரு சம எடையாக அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் முக்கியமான இன்னொரு காரணமும் படுகிறது. இயல்புவாதம் மனித ஆழத்தை இலட்சியவாதமில்லாமல் நோக்குவது. ஆகவே அதற்கு பூச்சுகள் இல்லாத காமம் ஒரு முக்கியமான பேசுபொருள். இம்மூன்று படைப்பாளிகளுமே காமத்தை கூர்ந்து நோக்கியவர்கள் என்பதைக் காணலாம். தங்கள் இயல்புப்படி இவர்கள் காமத்தை நேரடியாக எழுதியிருக்க வேண்டும். அதில் எஸ்.பொன்னுதுரை துணிந்த அளவுக்குக் கூட பிறர் துணியவில்லை. காரணம் நம் மரபின் தடை. அதைவிட முக்கியமான தடை என்பது இப்படைப்பாளிகளில் ஒழுக்க போதத்தின் தடை. இம்மூவருமே வலுவான ஒழுக்கவாதிகள். இவர்களால் தாங்கள் பாலுணர்வு எழுத்துக்களை எழுதுகிறோம் என்ற சுயபிரக்ஞையை சகித்துக் கொள்ள முடியாது. ஆகவே பாலுணர்வுகளை எழுதுவதற்கு மொழியின் புகைமூட்டத்தை இவர்கள் நாடினார்கள் என்று சொல்லலாம்.

எஸ்.பொன்னுதுரையைப்பொறுத்தவரை இன்னொரு முக்கியமான காரணத்தையும் சொல்ல வேண்டும். எஸ்.பொன்னுதுரை தன் எழுத்துவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன உணர்வுகளை நேரடியாகவும் தீவிரமாகவும் சொல்ல முயன்ற படைப்பாளி. இலக்கியத்தில் மன உணர்வுகளை நேரடியாகச் சொல்லுதல் பெரிய அறைகூவல். புற உலகத்தை அகத்தின் படிம வெளியாக மாற்றுவதன் மூலமே மன உணவுகளை வெற்றிகரமாகச் சொல்ல முடியும். சங்கப்பாடல்கள் முதல் நாம் காண்பது இதையே. இதைச்செய்ய இயல்புவாத அழகியலில் இடமில்லை.அவர்களுக்கு புறம் என்பது புறம் மட்டுமே. ஆகவே அகத்தை ‘அந்தரத்தில்’ கட்டி நிறுத்தவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கு இத்தகைய அலங்கார மொழியை துணைகொள்கிறார்கள். எஸ்.பொன்னுதுரை தனது பல கதைகளில் மன உணர்வுகளை அலங்காரச் சொற்களாலேயே சொல்ல முயல்கிறார். அதாவது செவிக்கு ஒரு தனி ஒலியின்பம் அளிக்கும் சொற்களை சமத்காரமாக பயன்படுத்துவதன் மூலம்.

ஒன்று அவரது நடை இப்படி உள்ளது ” சுந்தர விளையாட்டின் ஆதார கலசங்களை சட்டையின் கீழ்முடிச்சு நெகிழ்த்தி பிதுக்கியபோது உயிர்பெற்ற முயல்குட்டிகளைப்போன்று முன்னே பாய்ந்த கவற்சி..” [ஆகுதி]இது காமச்சித்தரிப்பு என்றால் ”கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் சுவர்க்கத்தின் எழில் மாடங்களை வனப்பிலும் அமைப்பிலும் தோற்கடிக்கும் நெடிதுயர்ந்த மாடம் .மாடத்தினுள் உப்பரிகை. அதன் காலதர்த் திரைகளிலே வெள்ளிகள் பூத்துக் குலுங்குவதான தோற்றம்..” என்னும் சித்திரம்.அதே கதையில் அதே பாணியில் எண்ண ஓட்டங்கள் ”கண்ணயர்ந்தேனா? கண்களை மூடியவண்னம் ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்தேனா? நினைவா? கனவா? நினைவென்றால் என்ன? கனவென்றால் என்ன? விழித்த நிலையின் கனவுகளே நினைவுகள். தூங்கிய நிலையின் நினைவுகளே கனவுகள். இரண்டிற்கும் இடையே உள்ல கயிற்றரவு நிலையில் பாம்பு எது பழுதை எது? அவஸ்தைப்படுகின்றேன்…”

இத்தகைய நடையில் எஸ்.பொன்னுதுரை எழுதிய ஆரம்பகாலக் கதை ‘கணை’. ”அஸால்ஹ பட்சம் பிரசவித்த பூரணை..”என்று தொடங்கும் கதை ”…நிலா பரதம் பயிலும் பாற்கதிர் கற்றையை பீச்சுகின்றது. பாலாவி நிகத்த திரைச்சேலைகளை தழுவி அவற்றை நாணத்திலாழ்த்தி களியிற் கெம்பும் மாருதி. வாலிப உடலங்களில் சடைத்து வளருந்தசைப் பிடுங்கல். விரகம் வியாபிக்கும் நிலைக்களனிலும் சோமா தேவியின் சேதநை சுழல் காற்று வாய்ச்சருகாக எற்றுண்டு அலைக்கழிந்து…” என்று நீள்கிறது. இக்கதை உட்பட எஸ்.பொன்னுதுரை இந்நடையில் எழுதிய பெரும்பாலும் எல்லா கதைகளுமே காமத்தின் கதைகளே. அடிப்படை இச்சைக்கும் தார்மீக நெறிகளுக்கும் இடையேயான முரண்பாடுமூலம் உருவாகும் போராட்டத்தைப் பற்றிய கதைகள் அவை. காமத்தைச் சித்தரிக்கவே மொழி இத்தனை ஜாலம் காட்டுகிறது. தன் முகத்தை நேரடியாக பார்க்க நாணி வண்ணக்கண்ணாடியில் பார்ப்பது போல உதவுகிறது இநத நடை.  ‘சீவர ஆடைக்குட் புகுந்தும் உடலில் மதர்க்கும் மாம்ஸ ஆக்கினைகளிலிருந்து விடுபடாது துயிலெழுந்து துயிலெழா நிலையில் பிதக் ஜன பிக்குகள் தவிப்பதைச் சொல்லும் ‘வீடு’ம் அத்தகைய கதையே.

இத்தகைய கதைகள் வசிப்புக்கு இன்பமளிக்கும்தன்மை கொண்டிருந்தாலும் எஸ்.பொன்னுதுரையின் சிறந்த இயல்புவாதக் கதைகளின் தளத்துக்கு நகர முடியவில்லை என்றே எண்ணுகிறேன். ஏன் என்றால் கமகுரோதத்தின் மன இருள் என்பது ஓர் யதார்த்தம். அதைச்சொல்ல அதேயளவுக்கு யதார்த்தமான மொழியும் முறையுமே பொருத்தமானது. காமச்சித்தரிப்பில் உள்ள இந்த அலங்காரம் ஒருவகை பசப்பாக ஜாடை அளித்துவிடுகிறது. இச்சொற்றொடர்ச் சிக்கல்களுக்குள் புகுந்துசென்று சிடுக்கெடுத்தால் கிடைப்பது தன் இயல்புவாதக் கதைகள் மூலம் எஸ்.பொன்னுதுரை மேலும் தீவிரமாக முன்வைத்த விஷயமே என்னும்போது செல்லச் செல்லச் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. சடங்கு குறுநாவலில் செந்திநாதனின் மனைவி சுயஇன்பம் செய்துகொள்ளும் இடம் ஓர் உதாரணம். தமிழிலக்கியத்திலேயே பெண் சுயஇன்பம் செய்துகொள்வது இப்படைப்பில்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் மிக அடக்கமாகவும் அழகாகவும் சொல்லப்பட்ட கலைத்தருணமாக இது உள்ளது. அவர் சொற்புழுதி கிளப்பி எழுதிய பிற இடங்களில் எங்கும் இத்தகைய நுண்ணியதும் இயல்பானதுமான காமச்சித்தரிப்பு நிகழவில்லை. 

இந்த மொழிநடையை லா.ச.ராமாமிருதத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம். ராமாமிருதமே சலிப்பூட்டும் நடையை மிதமிஞ்சி மீட்டிய படைப்பாளியாகவே இன்று வாசகர்களால் அறியபப்டுகிறார். ஆனால் அவருக்கு இந்த நடை ஒரு நுண்ணிய கருவி, அதன் மூலம் அவர் தொட்டு எடுக்க முயன்ற பிடிக்குச்சிக்காத ஒரு விஷயம் இருந்தது. அதை அவரது மீபொருண்மையியல் [மெட·பிஸிகல்] உண்மை என்று சொல்லலாம். அவரது தொடக்க காலக் கதைகளில் லா.ச.ராமாமிருதம் அந்த நடனமிடும் நடை மூலம் அன்றாடவாழ்க்கைக்கு அப்பாற்பட்ட நுண்ணிய ஓர் மீபொருண்மை அனுபவத்தைத் தொட முயல்கிறார். அதற்காக மரபிலிருந்து எடுத்துக் கொண்ட படிமங்களை பின்னி பின்னி வெறுமை வரைச் செல்ல முயல்கிறார். அப்போக்கில் மிக அபூர்வமான சொற்சேர்க்கைகளை அவர் உண்டுபண்ணுகிறார் என்பதனாலேயே அவரது இலக்கிய இடம் உறுதிப்படுகிறது. எஸ்.பொன்னுதுரையும் சரி ஆ.மாதவன் போன்றவர்களும் சரி அப்படிப்பட்ட மீபொருண்மைத்தளம் எதையுமே கொண்டிருக்கவில்லை. அவர்கள் சொல்ல விழைவது எளிமையான காம/ஒழுக்கச் சிக்கல்களையே. அவற்றுக்கு இந்த நடையின் தீவிரபாவனை தேவையானதாக இல்லை.

                              
 [  6 ]

 

எஸ்.பொன்னுதுரையை எப்படி தத்துவார்த்தமாக வரையறை செய்யலாம்? ஆ.மாதவனைப்போல அவரையும் ஒரு ‘நவீனத்துவ ஒழுக்கவாதி’ என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சென்ற பதிற்றாண்டில் சடங்கு தீ போன்ற படைப்புகள் மூலம் ஈழத்தில் ஒழுக்கவாதிகள் நடுவே அதிர்ச்சியலைகளை உருவாக்கிய ஒரு படைப்பாளியைப் பற்றி இப்படிச் சொல்வது ஆச்சரியத்தை உருவாக்கக் கூடும். அதனாலேயே ‘நவீனத்துவ’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினேன். ஒழுக்கவாதி என்பவன் யார்? மனித இனம் தன் அடிப்படை இச்சைகளை முறைப்படுத்திக் கொண்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நேர்மையான முறையில் அதன் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் எண்ணக்கூடியவன். ஒழுக்கம் சார்ந்து விதிகள் உருவாகின்றன. விதிகளின் அடிபப்டையில் அமைப்புகள் உருவாகின்றன. அமைப்புகளைச் சார்ந்து வாழும் அமைப்புமனிதர்கள் பெருவாரியாக சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் ஒழுக்க விதிகளைப்பற்றிப் பேசுவார்கள். அவற்றை மூர்க்கமாக வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் ஒழுக்கவாதிகள் அல்ல. உண்மையில் அமைப்பு கோரும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களின் நோக்கம். அதற்குப்பின் தங்கள் அந்தரங்க உலகில் அவர்கள் அவ்விதிகளைப் பொருட்படுத்துவதில்லை.

ஒழுக்கவாதி அமைப்பு சார்ந்த விதிகளை அப்படியே எடுத்துக் கொள்பவன். அவற்றின் நடைமுறைத்தன்மையை வலியுறுத்துபவன். அமைப்பின் விதிகள் நடைமுறையில் ஒழுக்கத்தை நிலைநாட்ட போதுமானதாக அல்லாமல் அமையலாம். சிலசமயம் சாராம்சத்தில் ஒழுக்கத்துக்கே மாறானவையாக அமையலாம். இந்நிலையில் ஒழுக்கவாதி அமைப்புக்கு எதிரானவனாக திரும்புகிறான். அமைப்பை மாற்ற அவன் முயல்கிறான். அமைப்புமனிதர்களின் எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் அவன் பலசமயம் ஒழுக்கக்கேடனாக முத்திரை குத்தப்படுகிறான். உண்மையான ஒழுக்கவாதி ஏதோ ஒருவகையில் சமூகத்தை விமரிசிப்பவனாகவும் கலகக்காரனாகவுமே இருக்க முடியும். காரணம், சமூகம் எப்போதும் முழுமையாக ஒழுக்க விதிகளின்படி செயல்பட இயலாதென்பதே. பலவகையன சமரசங்கள் வழியாகவும் பலவகையான இடக்கரடக்கல்கள் வழியாகவும்தான் சமூகம் இயங்க முடியும். ஒழுக்கவாதி அவற்றை இழுத்து முச்சந்தியில்போடுகிறான். ஆகவே அவை எதிர்ப்புக்கு உள்ளாகிறான். காலப்போக்கில் புதிய ஒழுக்க விதிகளை உருவாக்கி அவனே அமைப்பின் பகுதியாக ஆகிறான்

நவீனத்துவ ஒழுக்கம் என்பது நம் நாட்டில் அறிவியல்தொழில்நுட்பம் அதன் விளைவான நவீனக் கல்வி மற்றும் நவீன மனித உறவுகளின் விளைவாக உருவாகிவந்த ஒன்று. ஈ.வே.ரா அவர்கள் நம் மரபின் பெரும்பாலான நம்பிக்கைகளையும் அவை சார்ந்த அமைப்புகளையும் கடுமையாக நிராகரித்தவர். ஆனால் தொடர்ந்து ‘மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொல்லியும் வந்தார். அவரது எழுத்துக்களில் ஒழுக்கம் என்றால் என்ன என்பது பற்றிய அவரது விளக்கங்களைக் காணலாம். ஒட்டுமொத்தமாக அதை நவீனத்துவ ஒழுக்கம் எனலாம். தமிழ்ச்சமூக தளத்தில் நவீனத்துத்த்திற்கான ஆகப்பெரிய குரலாக ஒலித்தவர் ஈ.வே.ரா அவர்களே. தி.ஜானகிராமன், ஆ.மாதவன்,நீல.பத்மநாபன் போன்ற முன்னோடிப் படைப்பாளிகளை பொதுவாக நவீனத்துவ ஒழுக்கவாதிகள் என்று வகைப்படுத்தலாம். எஸ்.பொன்னுத்துரையும் அத்தகையவரே. இவர்கள் மூவருக்குமே இயல்புவாத அழகியல் இருப்பதையும் கவனிக்கலாம்.

நவீனத்துவம் மனிதனை சமூகத்தின் பிரிக்கமுடியாத உறுப்பாக நோக்கும் அணுகுமுறையைக் கைவிட்டது. அவனை தனிமனிதனாக நிறுத்தி அவனுக்கான அறத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்க முயன்றது. நவீனத்துவ அற/ஒழுக்கவியலானது பழமையான அற/ஒழுக்கவியலுடன் மோதும்போது எப்போதுமே தனிமனித உரிமையைப்பற்றியே பேசப்படுகிறது என்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். நவீனத்துவ ஒழுக்கவியலின் பணியே தனிமனிதனின் உரிமைக்குள் சமூகம் தலையிடாதபடி ஓர் ஒழுக்கவியலை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதே. நவீனத்துவத்தின் அறவியலிலும் ஒழுக்கவியலிலும் ·ப்ராய்டியம் வகித்த பங்கும் மிக முக்கியமானது. காமம் வன்முறை முதலியவறை மனிதனின் இயல்பான அந்தரங்க விருப்புகளாக முன்வைத்த ·ப்ராய்டியம் அவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது மனம் மீதான அடக்குமுறை என்றது. நவீனத்துவ ஒழுக்கவியலை தேடிய படைப்பாளிகள் அனைவரிலும் ·ப்ராய்டியக் கருத்துக்கள் எதிரொலி செய்தபடியே இருப்பதைக் காணலாம். அடிப்படை இச்சைகளை பாவம் என்ற முத்திரையில் இருந்து விடுவிப்பது இவர்களின் முக்கியமான நோக்கமாக உள்ளது.

தி.ஜானகிராமன், ஆ.மாதவன்,நீல.பத்மநாபன், எஸ்.பொன்னுத்துரை முதலியோரில் உள்ள ·ப்ராய்டியப் பாதிப்பு மிகவெளிப்படையானதும் நேரடியானதுமாகும். தி.ஜானகிராமனும் ஆ.மாதவனும் எஸ்.பொன்னுத்துரையும் காமத்தில் இருந்து குற்றவுணர்ச்சியை விடுவிப்பதை மிகவும் தீவிரமாகச் செய்கின்றார்கள். ஜானகிராமன் காமத்தை அழகிய அந்தரங்கக் களியாட்டமாக மாற்றி உறவின் நுட்பத்திற்குள் செல்வதனூடாக அதன் மீதான எதிர்மறை நிறப்பூச்சுகளைக் களைய முயல்கிறார். ஆ.மாதவன் காமத்தையும் பசியையும் மீண்டும் மீண்டும் ஒரேபுள்ளியில் இணைப்பதன் மூலம் இதை நிகழ்த்துகிறார். காமத்தை அன்பு காதல் முதலிய மெல்லுணர்வுகள் பக்கம் கொண்டுசெல்வதற்குப் பதிலாக உயிர்வாழ்தலுக்கான போராட்டம், தன்னகங்காரம் அல்லது தன்னிலை ஆகிய அட்டைப்படைக்கூறுகளின் பக்கமாக நகர்த்துகிறார். ஆனால் நீலபத்மநாபனில் காமத்தின் குற்றவுணர்ச்சி மிக முக்கியமான ஒரு பேசுபொருளாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. ‘பள்ளிகொண்டபுரம்’ குற்றவுணர்ச்சியின் கதை என்றால் அது மிகையல்ல. அந்நாவலின் இறுதியில் கார்த்யாயினியின் பிள்ளைகளில் பெண் அப்பா பக்கமும் பையன் அம்மா பக்கமும் சாயும் இடத்தில் ·ப்ராய்டிய நோக்கு வெளிப்படையாகவே உள்ளது.

எஸ்.பொன்னுத்துரை தன் ஒழுக்கத்தேடலையே தனது படைப்புகள் மூலம் மிகவிரிவாக நிகழ்த்துகிறார் என்று சொல்லலாம்.காமத்தைப்பற்றி பேசுவதே பிழை என்று சொல்லும் அமைப்புமனிதர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே அவரது ‘சடங்கு’ ‘தீ’ போன்ற ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. காமம் மனிதனின் அடிபப்டையான இச்சை என்றும் அதைப்பற்றிப் பேசுவதில் பிழையில்லை என்றும் நவீனத்துவ ஒழுக்கவியலாளர்கள் உலகமெங்கும் முன்வைத்த கோணத்தின் வெளிப்பாடுதான் இது. காமத்தைச் சுற்றி இயங்கும் மன ஓட்டங்களைச் சித்தரிப்பதில் பெரும்பாலான கதைகளில் எஸ்.பொன்னுத்துரை தீவிரமாக முயல்கிறார். காமத்தைக் கட்டுப்படுத்துவது, காமத்தில் இருந்து தப்ப அதை காணாததுபோலிருப்பது என நம் பண்பாடு கொள்ளும் எல்லா பாவனைகளையும் தீவிரமாகக் குத்தி உடைக்க தன் படைப்புகளில் முயல்கிறார். ஒழுக்க மீறலின் பலதளங்களைச் சித்தரிக்கும் கதைகளையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம் ‘வேலி’ ‘மறு’ ‘விலை’ ‘பாசக்கயிறு’. ஒழுக்க மீறல்கள் நிகழும் தளங்களில் உள்ள நியாயங்கள் மீதே எஸ்.பொன்னுத்துரையின் கவனம் மீண்டும் மீண்டும் படிகிறது. அங்கே ஆண்பெண் வேற்றுமை எப்போதும் ஒரு சிக்கலாகவே உள்ளது. கொழும்பில் சிங்கள வேசையுடன் தொடுப்பு வைத்துக் கொள்ளும் யாழ்பாணத்து ஆண்களை பெண்கள் கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், பிரிகிறார்கள், சேர்கிறார்கள், ஒரு கட்டத்தில் பழிக்குப்பழியும் கொள்கிறார்கள்.அடித்தள மக்கலின் வாழ்க்கையில் காம உறவுகளுடன் வன்முறையும் பிணைந்துள்ளது.

எஸ்.பொன்னுத்துரை தேடுவது ஒரு நவீனத்துவ ஒழுக்கவியலை. ஆண்மை சிறுகதைவரிசை வரையிலான அவரது ஆக்கங்களில் இருந்து அவரது கோணத்தை இவ்வாறு வகைப்படுத்தி வரையறைசெய்துகொள்ளலாம். காமம் இயல்பானது, தன்னிச்சையானது. அதை சமூக விதிமுறைகள் கட்டுப்படுத்தலாகாது. காமம் சார்ந்த பாவனைகளும் போலித்தனங்களும் புனித கற்பிதங்களும் உடைத்து வீசத்தக்கவை. காமத்தின் உண்மையை நேருக்கு நேராக நோக்குவதே உசிதமானதாகும். அப்படி நோக்கும்போது மனிதனின் சாரம் பிடிகிடைக்கிறது. உண்மையான உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கு இது தேவை. ஆண்மை தொகுதியில் உள்ள பல கதைகளில் மீண்டும் மீண்டும் காமத்தை நேர்மையாக அணுகுவதன் மூலம் உருவாகும் உறவுகளின் மேன்மை நோக்கி எஸ்.பொன்னுத்துரை நகர்வதைக் காணலாம்

இப்படைப்பாளிகளின் பல கதைகள் ஒன்றுபோலவே இருப்பதை வாசகன் கவனிக்கலாம். உதாரணம் ‘ஆண்மை’ கதையில் வரும் ‘அமரி’ யை தி.ஜானகிராமனின் கதையில் வரும் ‘பாலி’யுடன் இயல்பாக ஒப்பிடலாம். ஒரேகதைதான். கல்யாணமான பெண்ணை காமம் கோண்டு அணுகப்போகிறான் கதைசொல்லி. அவள் காமத்தைக் கடந்து தன் கணவனுடன் ஒரு நேர்மையான உணர்வை அடைந்திருப்பதைக் கண்டு, அவ்வுறவின் தூய்மையைஉணர்ந்து , விலகுகிறான். உரையாடல்கள் மூலம் சகஜமாக கதையை நகர்த்தி கச்சிதமாக தி.ஜானகிராமன் முடிக்கையில் ‘நான் மனிதனாய் மீளுயிர் பெற்ற திருப்தி ‘ என நேரடியாக அதை விளக்குகிறார் எஸ்.பொன்னுத்துரை . வேலி கதையின் இன்னொரு வடிவம் இது என்பதையும் வாசகர் காணலாம். அங்கே உண்மையான் உறவின் நேர்மையை உணர்பவன் கணவன். .இவ்வாறு எஸ்.பொன்னுத்துரை எழுதியிருக்கும் கதைகளின் பல பிற வடிவங்களை நீல பத்மநாபன் ,ஆ.மாதவன் ஆகியோரிடம்  கண்டடையலாம். ஆ.மாதவனிடம் இதற்கு உபரியாக மனித இயல்பில் எப்போதுமுள்ள தீமைநாட்டத்தின் வல்லமையையும் கண்டுகொள்ளலாம். மனிதன் நல்லியல்புகள் முன் எப்போதும் தன்னை சரணடையச் செய்பவனல்ல, அவனுள் அதேயளவுக்கு தீமைமீதான களிப்பும் உள்ளது என்று சொல்பவை அவரது கதைகள்.

நவீன ஒழுக்கவியல் தேடல் காரணமாகவே இவர்களின் பல கதைகள் ஒருவகை ‘பாலியல் அக்கப்போர்கள்’ ஆக இருப்பதாக வாசகர்களுக்குப் படலாம். அதிலும் நீல.பத்மநாபன் நேரடியாகவே ஒழுக்க மீறலைச் சாடி எழுதுபவர். தன் எழுத்தின் சாராம்சமான மன எழுச்சியாக நீல.பத்மநாபனே இதைச் சொல்கிறார்– ஒழுக்கவாதியான தனக்கு ஒழுக்க மீறல்கள் உருவாக்கும் ஒவ்வாமை. அதை ‘அப்படியே’ எழுதப்போய் அவர் சக ஊழியரால் ஒருமுறை தாக்கப்பட்டதும் உண்டு. ஆ.மாதவனிலும் இந்த அம்சம் உண்டு. தி.ஜானகிராமனில் சற்றே அடங்கிய தொனியில். இருந்தாலும் அவரது ‘மரப்பசு’ பிரபலமான ஒரு நடனக்கலைஞர் பற்றிய அக்கப்போர்தான் என்று சொல்கிறார்கள். எஸ்.பொன்னுத்துரைவின் பலகதைகள் யாழ்ப்பாண பாலியல் அக்கப்போர்களை விதைகளாகக் கொண்டவையாக இருக்கலாம். நம்மால் ஊகிக்க முடிவதில்லை. ‘தீ’ போன்ற கதைகளில் அவற்றை சற்றே உய்த்துணர முடிகிறது என்றாலும்.

ஆனால் பாலியல் அல்லாத தளங்களில் எஸ்.பொன்னுத்துரை நேரடியாக முகத்துக்கு நேராகவே தாக்கும் ஒழுக்கவாதியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று படுகிறது. அவரது தொகுதியில் உள்ள பல கதைகள் அப்படிபப்ட்டவை. ‘ஒரு யானைக்கதை’ போன்ற சிலகதைகள் அங்கதமாக வெளிப்பட்டிருக்கின்றன. மேடைக்கதைகள் போன்ற எழுத்துக்களில் நேரடியான விமரிசனம் உள்ளது. இந்நோக்குடன் விதவிதமான வடிவங்களில் எழுதிப்பார்த்திருக்கிறார் எஸ்.பொன்னுத்துரை. அவரது ஒழுக்க நோக்குக்கான ஆதாரமாக இவற்றைக் கொள்ளலாமென்றாலும் தமிழகச் சூழலில் ஒருவாசகனுக்கு இவற்றின் பல தளங்கள் பொருள்படுவதில்லை.

சுந்தர ராமசாமியுடன் இப்படைப்பாளிகளை ஒப்பிடுவது மேலதிகப் பொருள் அளிக்கலாம். சுந்தரராமசாமி நவீனத்துவர். அவரது தேடல் நவீனத்துவ அறவியலைத்தேடித்தான். தொடக்ககாலக் கதைகளில் சிலவற்றில் மட்டுமே அவர் ஒழுக்கச் சிக்கல்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதிகம்பேசப்பட்ட ‘போதை’ முதலிய கதைகள். பிறவற்றில் தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்குமான உறவு, தனிமனிதன் காலத்தின் முன் கொள்ளும் வெறுமையுணர்வு, அவனது சமரசங்கள் சரிவுகள் என்றே அவரது புனைவுலகு விரிகிறது. அவ்வகையில் இன்னும் விரிந்த ஒரு தரிசன தளத்தை சுந்தர ராமசாமி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஒழுக்கம் சார்ந்த வினாக்களுக்கு உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அவை மிக எளிதாக காலத்தில் பின்னகரும் என்பதுதான். யாழ்ப்பாணத்தை பதற வைத்த எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ இன்று ஒரு மெல்லிய பாலுணர்வுக்கதையாக மட்டுமே பார்க்கப்படும். மாறாக தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையேயான அறவியல்சிக்கல்களை நோக்கிச் சென்றதன் வழியாக சுந்தர ராமசாமி பேசிய தரிசனச்சிக்கல்கள் எப்போதைக்குமுரியவை. 

[ 7 ]

நவீனத்துவ ஒழுக்கவியலாளரான எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கையின் இச்சைகளையும் இயல்புகளையும் நேரடியாகச் சொன்ன இயல்புவாதப்படைப்புகளின் மூலமே தமிழிலக்கியத்தின் முக்கியமான முன்னோடியாக அமைகிறார். இலக்கியவாதி ஒரு நவீன ‘குலப்பாடகன்’[Bard]. காலம் துடைத்தழிக்கும் அவனது குலமும் நிலமும் அவனுடைய சொற்கள் வழியாகவே என்றும் வாழ்கின்றன. அம்மக்கள் காலூன்றி நின்ற நிலத்துக்குப் பதிலாக அப்படைப்பாளியின் மொழி வந்து அமைகிறது. எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்தின் குலப்பாடகன். தேறலருந்தி தெருவில் அலைந்து, யாழ்நரம்பே தன் நரம்பாகவும் கிணைத்துடிப்பே இதயத்துடிப்பாகவும் கொண்டு அங்கெ வாழ்ந்த பாணன்.இன்று அம்மண் நினைக்கப்படுவதும் என்றும் நி¨லைக்கப்போவதும் அவருடைய சொற்கள் வழியாகவே. அவரது ‘நனவிடைத்தோய்தல்’ தன்னினைவு எழுத்தில் ஒரு பேரிலக்கியம் என்று யாழ்ப்பாணத்தவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்கள் இழந்ததையும் தக்கவைத்துக் கொண்டதையும் பற்றிய மாபெரும் மானுட ஆவணம் அது. காலம் மனிதர்களை கைவிடுவதில்லை போலும். அனைத்தையும் எடுத்துக் கொள்ளும்போதும்கூட சில கலைஞர்களை விட்டுவைக்கிறது.

‘காலம்’ இதழில் வெளியான கட்டுரை

 

"இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.

பவள விழா அகவையில் "இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை


தமிழ்ப் புலமையாளர் மத்தியில் தமிழ்க்கலை இலக்கிய வல்லமைகளால் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இவ்வாண்டு மே மாதம் 24 ஆம் திகதி தனது பவள விழா அகவையைய எட்டியுள்ளார். அவரை வாழ்த்துவோமாக! தனது வாழ்வை நிரந்தரப்படுத்த முடியாது தமிழன் தடுமாறிக்கொண்டு வாழும் இக்காலகட்டத்தில் எஸ்பொவின் பவள விழாவை முக்கியத்துவப் படுத்த அவர் அப்படி செய்தற்கரியதான எதைச் செய்தார் என இன்றைய சந்ததியினரின் மனதை மட்டுமன்றி முதியோரின் சிந்தயையும் நெருடக்கூடும்.

" தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது."

இப்படிச் சொல்பவர் எஸ்.பொ.

அதற்கமைய இன்றும் தமிழ் ஊழியத்தில் தன் தேடலை ஊன்றித் தமிழுக்குப் புதிய பரிணாமத்தையும் புதிய முகத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவைகளே எஸ்.பொவை தமிழ் நெஞ்சங்களில் நிறுத்தி அவரை ஆராதிக்கச் செய்கின்றன.

தமிழ் இலக்கியத்தின் சகல அலகுகளுக்குள்ளும் சுழியோடி முத்துக்களைத் தருபவர். புனைகதை, கவிதை, நாடகம், கட்டுரை, என்ற தமிழக் கூறுகள் இவரது நுணுக்கமான அணுகுமுறைகள் மூலம் மேன்மை கொண்டிருக்கின்றன. தான் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற வகையில் இவர் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன்வசப்படுத்தி சாதனை புரிந்திருக்கிறார்.

மரபு, நவீன இலக்கியங்களில் இவரது சாதனைகள் இவரை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியக்காரராக இனங்காட்டியிருக்கின்றன. மரபை முற்று முழுதாக நிராகரிக்காமலே இலக்கியம் படைக்கிறார். இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்கு அளித்த மகாகவி பாரதியார், நவீன சிறுகதையின் பிதாமகன் புதுமைப்பித்தன் ஆகியோருக்கு மிக நெருக்கமாக நிற்கும் எழுத்தாளர் எஸ.பொ.

இவரது எந்தப் படைப்பை எடுத்துக்கொண்டாலும், அதன் வசன நடை விஷயத்தை எடுத்துச் சொல்லும் நுட்பமான பாங்கு, சொல்வளம் என்பன ஏனைய படைப்பாளிகளைப் பின்தள்ளி விட்டு இமயமாக உயர்ந்து நிற்கும். அவைகளை எத்தனை தடவை வாசித்தாலும் சலிக்காது.

இவரது எழுத்துக்களின் இன்னொரு பண்பாக துணிச்சலைக் கூறலாம். அடிக்கடி தனது படைப்புகளில் பரிசோதனைகளைச் செய்து காட்டுபவர். கட்டுடைப்புச் செய்த இவரது எழுத்துக்கள் "பழைய பஞ்சாங்களங்களின்" திட்டுக்களைப் பெற்றது மாத்திரமன்றி இவருக்குப் பல பாதிப்புக்களையும் ஏற்படுத்தியது.

"தீ" என்ற இவரது முதல் நாவல் இவருக்கு "பால் இயல்" எழுத்தாளர் என்ற பெயரைப் பெற வைத்தது. "ஆண்மை" என்ற ஒரே பெயரில் பல கதைகளை எழுதி எஸ.பொ நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். தனது படைப்புகளுக்கு பெயரிடும் பொழுது எழுத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, பொருத்தமாகவும் குறுகியதாகவும் இருக்கப் பார்த்துக் கொள்வார். "தீ", "லீ", "அவா", "வலை", "தேடல்", "மொட்டு", "சடங்கு" இப்படியானவையே அவரது படைப்புகளின் பெயராக இருக்கின்றன.

வாசகனுக்குத் தமிழ்க் கலாச்சார பண்புகளைக் கொடுப்பவையாக இவரது சமூகம் சார்ந்த புனைவுகள் அமைந்திருப்பதைக் காணலாம். மகாவம்சம் போன்ற ஆதிகால வரலாற்றுக்குள் நுளைந்து கல்கியைப் போல் இவரும் பல வரலாற்றுப் படைப்புகளைப் படைத்திருக்கிறார். இவை சம்பந்ப்பட்ட இதிகாசங்களையும் வரலாறுகளையும் விமர்சிப்பவையாகவும் அமைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சுவிசேஷம், திருக்குர்ஆன் என்பவைகளின் போதனைகளையும் தனது புனைவுகளுக்குள் கொண்டு வந்துள்ளார். இவர் தமிழ் நாட்டின் "கல்கி" சஞ்சிகையில் தொடராக எழுதி வந்த கீதைக் கதைகள் இவரது எழுத்துக்கு ஒரு திருப்புமுனை!. "இதை பொன்னுத்துரை எழுதுகிறாரா?" எனப் பழைய தலைமுறை வியந்ததுமுண்டு.

தமிழ்ப் பரப்பில் வேறெந்த அறிஞர்களுக்குமில்லாத மேலதிகத் தன்மையாகப் புனைவுக் கலையைப் பெற்றுள்ளார். இது எஸ்.பொவுக்குக் கிடைத்துள்ள யோகம். இவரது "நனவிடை தோய்தல்" என்ற சுயசரிதை தமிழிற்கு ஒரு நவீன உத்தியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்றுவரைக்கான தனது வாழ்வை "வரலாற்றில் வாழ்தல்" என்ற தலைப்பில் 2000 பக்கங்களுக்கு மேலான நூலாக்கி இருக்கிறார்.

ஐம்பதுகளில் அம்பாறையில் தமிழனுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வை இவர் களரி என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார். இன விரிசலை இலக்கியத்தில் முதன் முதல் காட்டியவர் எஸ்.பொ என்றும் கூறப்படுகிறது.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என இப்பொழுது சர்வதேசங்களிலும் பரவலாகப் பேசப்படுவதை வாசகர் அறிவர். இந்தப் புது வருகைக்கு ஒரு முகத்தைக் கொடுத்து, அதைப் பரம்பல் செய்வதில் முன் நின்றவர் எஸ்.பொ.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம்தான் சர்வதேச தமிழ் இலக்கியத்திற்கு தலைமை தாங்குமெனத் தன் குரலை ஓங்க ஒலித்தார். ஒலித் குரலின் காத்திரத்தை கருத்திற்கெடுத்த சர்வதேச நாடுகளில் பனியோடு போராடிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் தமது மூடிக்கிடந்த பேனாக்களை திறக்கத் தொடங்கினர். அதன் அறுவடைதான் இன்று புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பெருவிருட்சமாகப் பலித்து, அறுசுவை மிக்க கறுத்தக் கொழும்பான் மாங்கனிகளைத் தமிழ் வாசகனுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. "பனியும் பனையும்" என்ற சிறுகதைத் தொகுப்பின் வருகைக்கும் அத்திவாரமிட்டவர் எஸ்.பொவே!.

எழுத்தாளராக மட்டுமின்றி எஸ.பொ இலக்கிய நூல் வெளியீட்டாளராகவும் தனது தமிழ்ப் பணியை அகலித்துள்ளார். மிகச் செழிப்பாகச் சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் "மித்ர ஆர்ட் அன் கிரியேஷன்ஸ்" என்ற நூல் வெளியீட்டகம் எஸ.பொவுக்குச் சொந்தமானதே. இதனூடாகத் தனது சொந்த மண்ணான ஈழத்தின் அரிய தமிழ் நூல்களோடு நிமிரத் துடிக்கும் தமிழ் உறவுகள் வாழும் மண்ணிலிருந்து கிளம்பும் இலக்கிய எத்தனிப்புக்களையும் சர்வதேசத் தமிழ் சமூகம் அறிவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் "மலேசியச் கதைகள்" எஸ்.பொவை சர்வதேசத் தமிழனின் நெஞ்சில் பதிய வைத்திருக்குமெனலாம்.

ஈழத்து இலக்கிய மனையைத் தமிழ் நாட்டு இலக்கியத்திற்குச் சவாலாக உள்நாட்டில் யார் யாரோடு இணைந்து செயல்பட்டாரோ, பிற்காலத்தில் அவர்களோடு முரண்பட்டார். தனித் தீவானார். "அரசியல் போக்கிரிகளின் கடைசி உறைவிடம்" என்ற கருத்து நிலைக்குத் தேறிய பின்னர் அவர் இலக்கியத்தில் அரசியல் கலக்கக் கூடாதென முழங்கினார். ஆனால் அப்போது ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்தி ஆளுகை செய்து கொண்டிருந்த முற்போக்கு இலக்கிய இயக்கம் தனது அரசியல் செல்வாக்கை நம்பி அதை மறுத்தது. பெரும்பான்மை தனக்கில்லாத போதும் தனது இல்கியச் செழுமையை பலமாகக் கொண்டு ஜனநாயக முறைமையையும் பொருட்படுத்தாது தனித்து நின்று எதிர்த்தார்.

இதற்காக அச்சு ஊடகத்தையும் மேடையாகவும் பயன்படுத்தினார். "இளம்பிறை" எம்.ஏ.ரஹ்மான், அமரர்களானரே.ஜே.கனகரத்னா, கனகசெந்திநாதன், ஆகியோர் எஸ்.பொவை ஒட்டுமொத்தமாக ஆதரிக்காது விட்டாலும் அன்றைய முற்போக்கின் இலக்கியப் போக்கை ஆதரிக்காதிருந்தனர்.

பிரபல இலக்கியவாதியான மு.தளையசிங்கமும் எஸ்.பொவைப் போல் தனது இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்தினார். அந்தச் சமரில் யார் வென்றாரென்பதை இன்றைய இலக்கிய உலகு நன்கு அறியும். எஸ.பொ இன்றும் நிமிர்ந்தே நிற்கின்றார். அவர் ஈழத்து இலக்கிய செல்நெறிக்குக் கொடுத்த அதிர்வுகள் இன்று இலக்கியமாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வீச்சு எதிர் முகாமுக்குள்ளும் இன்று நுழைந்துவிட்டது. அம்முகாம்களும் விழிப்புக் கொண்டு எஸ்.பொவின் இலக்கியக் கருத்துக்களை சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இது எஸ.பொவின் தூர நோக்கிற்கு எடுத்துக்காட்டல்லவா. முற்போக்கு ஒரு கருத்துநிலை அது மாறக்கூடியதென இன்று கருதுவோர் அன்று அரசியலுக்குப் பயந்தா எஸ்.பொவுக்கு தூரநின்றனர்.

ஆறுமுக நாவலர், சுவாமி ஞனப் பிரகாசர் ஆகிய தமிழ்ப் பெரியார்கள் தோன்றிய நல்லூர்ப் பிராந்தியத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பமொன்றில் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) பிறந்தார். புனித பத்திரிசியார் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி என்பவற்றில் கற்றார். பொதுவுடமைக் கட்சியின் ஈடுபாடு இவரை பத்திரிசியார் கல்லூரியிலிருந்து விலகச் செய்தது. என்.கே.ரகுநாதன், செ.கணேசலிங்கன் ஆகியோரும் இவரது சமகாலத்தவராக பரமேஸவராக் கல்லூரியில் கற்றனர். தமிழ்நாடு சென்று கலைமாமணிப் பட்டத்தைப் பெற்றார். இவருக்கு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறையால் வெறுப்படைந்து யாழ் குடாவைத் துறந்து கம்பளை, கொழும்பு மட்டக்களப்பு போன்ற இடங்களில் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டார். பாடவிதான சபை, திரைப்படக் கூட்டுத்தாபனம் என்பவற்றிலும் எஸ்.பொ கடமை புரிந்தார். அப்போது அரசுக்கு அனுசரணையாக இருந்த தமிழ் அதிகாரிகள் இந்நிறுவனங்களில் இவர் கடமை புரிவதற்கு இடைஞ்சலாக இருந்தனர். வன்மங்கள் பாராட்டத் தொடங்கினர். இவரது கல்விக் கொள்கைக்கு "எஸ்.பொ இசம்" என்ற முத்திரையிட்டு இவரது உழைப்பை நிராகரித்தனர். தனது வீட்டிற்குள் அரசியல் பலம் இருந்தும் எஸ்.பொ அதைத் தனது எதிராளிகளுக்கு எதிராகப் பாவிக்கவில்லை. ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று ஸம்பியாவிற்குச் சென்றார். பின் அவுஸ்திரேலியா சென்று, அங்கும் இந்தியாவிலுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஆக தமிழையும் எளிமையையும் தனது வாழ்வாக நச்சி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கியப் பிரம்மா 'எஸ்.பொ காலம்' தமிழ் இலக்கியத்திற்கு மலர்ச்சியையும் உயர்ச்சியையும் உபசரித்ததென்பது மெத்தச் சரியானதே.

கானலைக் காட்டி, இலக்கிய உலகை ஏமாற்றிக் கொண்டிருந்த குழுமத்தை வாசகனுக்கு இனங்காட்டி, நெறிப்படுத்தி, நன்னீர் அருவிகளைத் தமிழ் இலக்கியத்தில் பாயவைத்து, தமிழ் இலக்கியத்தை நிமிர வைத்திருக்கும் எஸ்.பொன்னுத்துரையின் பவள விழா அனைத்துத் தமிழுலகத்துக்குமான தமிழ் விழாத்தான். அதை குதூகலாமாகக் கொண்டாடி மகிழ்வது நாம் தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும் .

- - -வீரகேசரி இணைப்பான (16.06.2007) கலைக்கேசரியில் சமரசன் - - -

 

 
Make a Free Website with Yola.